இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை  பத்தாயிரத்தை நெருங்குகிறது. நிலைமை இன்னும் கட்டுக்குள் வராததால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடியவுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்திருப்பதுடன், ஏழை, எளிய மக்கள் வருவாயை இழந்து கஷ்டப்படுகின்றனர். சமூக, பொருளாதார ரீதியாக கடும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுகிறது. 

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு விவகாரத்தில் பொருளாதாரம் சார்ந்த ஆலோசனைகள் மட்டுமல்லாது பொதுவான பல ஆலோசனைகளை மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் தொடர்ச்சியாக டுவிட்டரில் வழங்கிவரும் ப.சிதம்பரம், நாளை பிரதமர் மோடி ஆற்றவுள்ள உரையை பெரிதும் எதிர்நோக்கியிருப்பதாக தெரிவித்துள்ளதோடு, அதில் சில அறிவிப்புகளையும் எதிர்பார்க்கிறார்.

அதுகுறித்து ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள டுவீட்டில், நாளை காலை பிரதமர் மோடி ஆற்றவிருக்கும் உரையை உங்களைப் போல நானும் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன் ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது.

ஊரடங்கு நீடித்தாலும் மக்கள் வாழ வேண்டுமே? 21 நாட்களாகத் தவிக்கும் ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் எதிர்பார்ப்பது பண உதவி. கஜானாவில்பணம் இருக்கிறது. மத்திய அரசின் 2020-21 செலவு பட்ஜெட்டில் ரூ 30 லட்சம் கோடி இருக்கிறது. இது நாட்டுடைய பணம், நம்முடைய பணம்

இந்த ரூ 30 லட்சம் கோடியில் ரூ 65,000 கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தருவாரா மாட்டாரா என்பது தான் கேள்வி. நம்பிக்கையுடன் பிரார்த்திக்கிறேன். நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள் என்று ப.சிதம்பரம் டுவீட் செய்துள்ளார்.