வரும் 6ம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ‘இதயங்களை இணைப்போம்’ என்ற தலைப்பில் திமுக மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் மாநாட்டில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லீம் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதின் ஓவைசியை திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு மாநிலச் செயலாளர் மஸ்தான் சந்தித்து பேசினார். அவருக்கு ‘இதயங்களை இணைப்போம்’ மாநாட்டுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.


இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ஓவைசி, திமுக மாநாட்டுக்கு வருவதாக சம்மதம் தெரிவித்தார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஓவைசி 5 இடங்களில் வெற்றி பெற்றார். ஆர்.ஜே.டி. - காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியை பாதித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அண்மையில் ஓவைசி அளித்த பேட்டியில் திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக மாநாட்டில் ஓவைசி கலந்து கொள்ள உள்ளார். எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஓவைசி கட்சி இடம் பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.