அதிமுக தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்ட த்தில் புதுக்கோட்டை நகராட்சியில் 42 பதவிகளுக்கும், அறந்தாங்கி நகராட்சியில் 27, பதவிகளுக்கும், பொன்னமராவதி, ஆலங்குடி, கறம்பக்குடி, அரிமளம், கீரமங்கலம், அன்னவாசல், இலுப்பூர் மற்றும் கீரனூர் ஆகிய 8 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளில் 120 பதவிகளுக்கும் என மொத்தம் 189 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

27 வார்டுகளிலும் 34 ஆயிரத்து 638 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 16 ஆயிரத்து 573 பேரும், பெண் வாக்காளர்கள் 18 ஆயிரத்து 65 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 27 பேரும் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து அதிமுக தனது நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த இந்த ஆலோசனையில் அந்த பகுதியை சேர்ந்த தேமுதிக செயலாளர் கலந்துகொண்டது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிமுக - தேமுதிக கூட்டணியா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தங்களுக்கும் சில இடங்களை ஒதுக்க வேண்டும் என தேமுதிக நிர்வாகிகள் அதிமுக நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, தலைமையிடம் கேட்டு சொல்வதாக அதிமுக நிர்வாகிகள் பதில் அளித்ததால் தேமுதிக நிர்வாகிகள் அதிருப்தியுடன் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.

அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி குறித்து தலைமை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அறிவிக்காத நிலையில் திடீரென தேமுதிக நிர்வாகிகள் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது புதுக்கோட்டையில் மட்டுமல்லாமல், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.