They are our true well-wishers

மும்பை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம் கவுன்சிலர் ஒருவர், ‘‘சிவசேனாதான் எங்களுடைய உண்மையான நலம் விரும்பி’’ என பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்துத்துவா கட்சி

சமீபத்தில் நடந்து முடிந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை என்றாலும், 84 வார்டுகளில் வெற்றி பெற்ற சிவசேனா, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

‘இந்துத்துவா’ கொள்கை கட்சி என அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும் சிவசேனா, இந்த தேர்தலில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இரு பகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது.

2 பேர் வெற்றி

சிவசேனா மொத்தம் 5 வார்டுகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. அவர்களில் பாந்த்ரா மற்றும் அம்போலி-ஜோகேஸ்வரி பகுதியில் நிறுத்தப்பட்ட இரு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

பாந்த்ரா பகுதியில் வெற்றி பெற்ற ஹாஜி ஹலீம்கான் (வயது 35), சிவசேனா கட்சி பற்றி கூறியதாவது-

உண்மையான நலம் விரும்பி

‘‘சிவசேனா முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என்ற தவறான பிரசாரத்தை ஒரு பிரிவினர் பரப்பி வருகிறார்கள். மாறாக சிவசேனாதான் எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக எப்போதும் உதவி செய்து வந்துள்ளது.

அவர்கள்தான் எங்களுடைய உண்மையான நலம் விரும்பிகள். மும்பையில் உள்ள முக்கியமான மசூதிகள் பால்தாக்கரேவின் உதவியினால்தான் கட்டப்பட்டன என்பதை என்னால் கூற முடியும். காங்கிரஸ் கட்சி, முஸ்லிம் மக்களை தங்கள் ‘ஓட்டு வங்கி’யாக மட்டுமே நடத்தி வருகிறது’’.

இவ்வாறு அவர் கூறினார்.

மென்மையான அணுகுமுறை

மற்றொரு கவுன்சிலரான சாஹிதா கான் (52) புறநகர் பகுதியான அம்போலி பகுதி வார்டில் இருந்து வெற்றி பெற்றவர். அவரும் நேர்மையான பிரச்சினைகளுடன் செல்லும் முஸ்லிம்களுக்கு சிவசேனா எப்போதும் உதவி வருவதாக, அவர் கூறினார்.

தற்போதைய மாநகராட்சி தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பாக, முஸ்லிம்களிடம் தங்கள் மென்மையான அணுகுமுறையை தெரிவிக்கும் விதத்தில் உருது பத்திரிகைகளில் முஸ்லிம்களின் வாக்குகளைக் கோரி பெரிய அளவில் சிவசேனா சார்பில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தது.