’தமிழ்நாட்டில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் எதிரிகளே இல்லை!’ என்று செம்ம கெத்தாக பா.ஜ.வினர் சொல்லிக்கலாம் போல. அந்தளவுக்கு ஸ்டாலின், கமல் என்று ஆளாளுக்கு பிரதமர் மோடியை தாறுமாறாக புகழ துவங்கிவிட்டனர். இதன் முடிவு எங்கே போய் நிறுத்தப்போகிறது என்று புரியவில்லை. 

பாரதிய ஜனதாவை மிக வன்மையாக எதிர்த்து வந்த தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின், கடந்த சில நாட்களாக மிக அதிகமாக மோடியை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார். இந்த சந்தோஷத்தில் திக்கு முக்காடிக் கிடக்கிறது பாரதிய ஜனதா. இந்த நிலையில்  உணவு உரிமை, கலாச்சாரம், ஜி.எஸ்.டி. ஆகிய விஷயங்களில் பாரதிய ஜனதாவை விமர்சித்து தள்ளிக் கொண்டிருந்த கமல்ஹாசனும் பிரதமர் மோடியை வாயாற புகழத் துவங்கியுள்ளதுதான் ஹாட் ஹைலைட்டே. 

இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்டோர் மீது பதியப்பட்டிருக்கும் ‘தேச துரோக வழக்கு’ விவகாரத்தில்  கமல்ஹாசன் ஒரு ட்விட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது....“பிரதமர் ஒரு ஒற்றுமையான இந்தியாவை விரும்புகிறார். இதை லோக்சபாவில் அவரது உரைகள் உறுதிப்படுத்துகின்றன. இந்திய நாடும், அதன் சட்டமும் அதனை உருவாக்க முனைய வேண்டாமா? பிரதமரின் விருப்பத்திற்கு எதிராக எனது நண்பர்கள் 49 பேர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரில் தொடரப்பட்டிருக்கும் இவ்வழக்கை தள்ளுபடி செய்து, நீதியினை நிலைநாட்ட வேண்டும்!” என்று கூறியுள்ளார். கமலின் இந்த ட்விட்டை பார்த்துத்தான் பாரதிய ஜனதாவினர் கண்ணடித்து சிரித்துக்கொண்டுள்ளனர். 

அதாவது மாட்டிறைச்சி உண்ண தடை விவகாரத்தில் ”உணவு ரீதியில் தேசத்தை பிரிக்க பார்க்கிறார்கள்” என்றெல்லாம் வாய் பேசிய கமல் இன்று ‘பிரதமர் ஒற்றுமையான இந்தியாவை விரும்புகிறார். அதை அவரது நாடாளுமன்ற உரைகள் உறுதி செய்கின்றன.’ என்று உண்மையை கூறியுள்ளாரே! தனக்கு அவசியம் என்றால் மட்டும் உண்மை பேசுவார் போல கமல்.” என்று வெளுத்துள்ளனர். 
நியாயமா கமல்!