அதிகார நோக்குடனும், மக்கள் நலன் மீதான அலட்சியத்துடனும் அரசு இருந்தாலும் நம் கடமையை ஆக்கப்பூர்வமாக செயல்படுவதே என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் நலன் கருதி அரசின் முன் நாம்  வைக்கும் கேள்விகள் என 10 கேள்விகளை அவர் முன்வைத்துள்ளார். அதன் முழு விவரம்:- 

நீட் தேர்வு தேவையில்லை:

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற முயற்சி எடுக்காமலும், நீட் தேர்வுக்கு தடை வாங்குவதற்கு இருக்கின்ற நேர்மையான காரணங்களை வைத்து மத்திய அரசினை வழிக்குக் கொண்டு வராமலும், மாணவ மாணவியருக்கு தேர்வுக்கான முறையான பயிற்சியும் தன்னம்பிக்கையும் தர தவறிய இந்த அரசால் இன்னும் எத்தனை மரணங்கள் தமிழகம் தாங்கும்.?  நிவாரணம் கொடுப்பதன் மூலம் பிரச்சனையை மூடிமறைக்க நினைக்கிறதா தமிழக அரசு.

கிசான் திட்ட முறைகேடு: 

வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கான உதவித்தொகை, உண்மையான பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்க  தவறியதன் மூலம் தன் ஊழல் முகத்தைக் கொரோனா காலத்தில் கூட அரசு காட்டுவது முறையா.

ஆன்லைன் கல்வி முறைப்படுத்துதல்:

ஆன்லைன் கல்வி முறையை நடைமுறைப் படுத்தாமல், அதற்கான தொழில்நுட்ப தேவைகளை மேம்படுத்துவது போன்ற மிக முக்கியமான திட்டங்களை முன் வைக்காமலும், அரசு அலட்சியப் போக்கு காட்டுகின்றது. இவற்றை நெறிப்படுத்த இந்த அரசு என்ன செய்யப் போகின்றது.?

கொரோனா முறைகேடுகள்: 

முன்னெச்சரிக்கை இல்லை, பாதுகாப்பு நடவடிக்கைகளில் முறையான சிந்தனை இல்லை,  மக்களை கைகளை கழுவச் சொன்ன அரசு மக்களையே கை கழுவி விட்டது ஏன்.? கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களுக்கு அரசு சொல்லும் பதில்தான் என்ன.

எட்டு வழி சாலைக்கு எதற்காக இத்தனை அவசரம்:

கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் விவசாயத்துறையில் 3.4 சதவீத வளர்ச்சியை எட்டிய நிலையில் எட்டு வழி சாலையை அமல்படுத்த ஏன் இந்த அரசு துடிக்கிறது.

மீனவர்கள் பாதுகாப்பு: 

பருவகாலம் மழையினாலும், புயலானாலும், முதலில் பாதிக்கப்படுபவர்கள் மீனவர்களே, எனவே அவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் தொழில் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், இந்த அரசு எப்போது கவனம் செலுத்தும்.

வேலைவாய்ப்பின்மை:

வரலாறு காணாத GDP சரிவில் இருந்து மீள வேலைவாய்ப்புகள் உருவாக இன்று என்ன திட்டம் இந்த அரசு வைத்துள்ளது. மத்திய அரசிடமிருந்து GST தமிழகத்திற்கான பங்குகளை பெறுவதில் அழுத்தம் ஏன் இல்லை. மாநில அரசு அழுத்தம் தராமல் மத்திய அரசிடம் நிதி பெறுவது சாத்தியமில்லை, GDP வீழ்ச்சியால் GST பங்கை பெறும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர யோசிப்பது ஏன்.

அம்மா அரசாங்கம் டாஸ்மாக்கை எப்போது மூடத் துவங்கும்:

அரசின் வருவாய்க்கு ஏழை மக்கள் வயிற்றில் அடிக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை கொரோனா காலத்திலும் திறந்து மக்களிடமிருந்து பணம் பிடுங்க ஏற்பாடு செய்தீர்கள். எப்போது உங்கள் அம்மா சொன்னதை போல் டாஸ்மார்க் மூடுவதை தொடங்கப் போகிறீர்கள்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 

மேடு பள்ளமான சாலைகளில் முறையற்ற மற்றும் பணியில் முடியாத மழைநீர்வடிகால்வாய்கள், பரவும் டெங்கு. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்திருக்கிறீர்கள். இதுபோன்ற மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் குறுகிய  கால தொடர் என்று இவ்வளவு குறுக்கி மூன்று நாட்களில் கண்துடைப்பாக சட்டமன்ற தொடரை நடத்தி முடிப்பது ஏன் என மக்கள் சார்பாக மக்களுடன் நின்று மக்கள் நீதி மையம் தமிழக அரசிடம் கேட்கும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுமா தமிழக அரசு என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.