மத்திய பாஜக அரசை வீழ்த்துவது நோக்கமல்ல என்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே நோக்கம் என்றும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதேபோல் தங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு மற்ற கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தெரிவித்தார். இதனை அடுத்து உடனடியாக கே.சி.பழனிசாமி அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் பாஜக அரசை வீழ்த்துவது நமது நோக்கமல்ல என்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே நோக்கம் என்று நமது அம்மா நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

அஇஅதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் அண்மையில் தொடங்கப்பட்டது. நமது புரட்சி தலைவி அம்மா என்று அந்த பத்திரிகை வெளியிடப்பட்டு வருகிறது. அதில், மற்ற கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் நமக்கென்ன பயன்? என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த தலையங்கத்தில், கடந்த 1999 ஆம் ஆண்டு மத்தியில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பாஜகவை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றியது அதிமுகதான். தற்போது கூட, மத்திய அரசின் ஆட்சியை கவிழ்க்க அஇஅதிமுகவால் மட்டுமே முடியும். ஆனால், நமது நோக்கம் அவர்களைக் கவிழ்ப்பதல்ல. நமது நோக்கம் ஒன்றே... உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதே என்று அதில் கூறப்பட்டுள்ளது.