திருமலை திருப்பதி தேவஸ்தான பணியிலிருந்து, வேற்று மத ஊழியர்களை நீக்க, தேவஸ்தானத்திற்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தடைவிதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், தற்போது, ஹிந்து அல்லாத பிற மதங்களைச் சேர்ந்த, 45 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஹிந்து தார்மீக நிறுவனமான தேவஸ்தானத்தில், வேற்று மதத்தவர் பணியாற்ற கூடாது என, 2007 முதல், ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஊழியர்களை மட்டுமே தேவஸ்தானம் நியமித்து வருகிறது.இந்நிலையில், 'தற்போது பணிபுரிந்து வரும், 45 ஊழியர்களையும், தேவஸ்தான பணியிலிருந்து நீக்கி, அவர்கள் வகித்து வரும் பணிக்கு தகுந்தபடி, அரசு பணி வழங்க வேண்டும்' என, தேவஸ்தானம் முடிவு செய்தது.

இது குறித்து, ஆந்திர மாநில அரசிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், தேவஸ்தான அதிகாரிகளின் இந்த முடிவுக்கு, அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், 'தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து ஊழியர்களும், மனதால் ஹிந்து மதத்துக்கு அளிக்க வேண்டிய மரியாதையை அளித்து, ஏழுமலையான் மீது, பயபக்தியுடன் பணியாற்றி வருகிறோம்.

அதனால், எங்களை தேவஸ்தான பணியிலிருந்து நீக்க தடை விதிக்க வேண்டும' என, 45 ஊழியர்களும் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள், தேவஸ்தான பணியிலிருந்து, வேற்று மத ஊழியர்களை நீக்க தடை விதித்து, உத்தரவிட்டனர்.