ஓசூரில் நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் முடிதிருத்துவோர் தங்களுடைய வாழ்வாதாரம் 50 நாட்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி நாதஸ்வரங்கள் இசைத்தும் தவில்கள் வாசித்தும் தங்களது கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஓசூர் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் முடிதிருத்துவோர் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் அனைவரும் கொரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 

நாடு முழுவதும் 4 வது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அதில் பல்வேறு தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில்  தங்களுடைய முடி திருத்தும் கடைகள் மற்றும் இசை பள்ளிகள் ஆகியவற்றைத் திறந்து தங்களுடைய வாழ்வாதாரத்தை அரசு காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்று அதற்கான கோரிக்கை மனுக்களை ஓசூர் சார் ஆட்சியரிடம் அவர்கள் அனைவரும் அளித்தனர். அதனைத் தொடர்ந்து முடி திருத்துபவர்கள் மற்றும் இசைப்பள்ளி நடப்பவர்கள் அனைவரும் தங்களுடைய இசைப்பயிற்சி பள்ளி முன்பு நாதஸ்வரங்களை இசைத்தும் தவில்களை வாசித்தும் தங்களது நியாயமான கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனவேண்டுகோள் விடுத்தனர். 

கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கால் கடுமையாக  பாதிக்கப்பட்டு  தங்களது குடும்பத்தை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே தமிழகஅரசு தங்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரண நிதிகளை வழங்க கோரியும் முடிதிருத்தும் கடைகளை உடனே திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும், அதேபோல்  சுப நிகழ்ச்சிகளுக்கு தங்களை நாதஸ்வரம் இசைக்க  அனுமதிக்க வேண்டும் எனவும்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.