இனி எப்போதும் பன்னீர்செல்வத்தால் ஆட்சிக்கு வரவே முடியாது என கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும் முதலமைச்சராக பன்னீர்செல்வமும் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில் கட்சியும் ஆட்சியையும் ஒரே இடத்தில் தான் இருக்கவேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்தனர்.

இதையடுத்து பன்னீர்செல்வம் கடந்த 5 ஆம் தேதி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் கடந்த 7 ஆம் தேதி திடீரென சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

இதையடுத்து சசிகலாவும் ஓ.பி.எஸ்சும் ஆளுனரை தனித்தனியாக சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

சசிகலா தரப்பில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதாக கையொப்ப பட்டியலை ஆளுநரிடம் அளித்தும் இதுவரை சசிகலாவை பொறுப்பேற்க ஆளுநர் அழைக்கவில்லை.

இதனிடையே தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை சசிகலா கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளார்.

இருந்தாலும் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு கூடி கொண்டே செல்லும் நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இதுவரையில் 10 எம்.பி.க்களும், 6 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நேற்று கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்ற சசிகலா, எம்.எல்.ஏக்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்றும் எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில், கூவத்தூரில் செய்தியார்களை சந்தித்த கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறியதாவது:

சசிகலாவை ஆட்சியில் அமர்த்த 127 எம்.எல்.ஏக்கள் சேர்ந்து முடிவு செய்துள்ளோம்.

அதிமுகவை காப்பாற்ற சசிகலா செயல்பட்டு வருகிறார்.

பன்னீர்செல்வத்திற்கு எம்.எல்.ஏக்களின் ஆதரவு 7 க்கு மேல் தாண்டாது.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டி காத்த கட்சியை உடைக்க ஓ.பி.எஸ் முற்படுகிறார்.

சசிகலா எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்துவது ஊக்கத்தை அளிக்கிறது.

7 எம்.எல்.ஏக்களை வைத்துகொண்டு பன்னீர்செல்வம் யாரை நம்பி ஆட்சி அமைக்க முடியும்.

இனி எப்போதும் பன்னீர்செல்வத்தால் ஆட்சிக்கு வரவே முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.