இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், 21 நாட்களுக்கு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்களை தவிர பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரசின் தீவிரத்தை மக்கள் புரிந்துகொள்ளவில்லை. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வந்து சுற்றுவதையும், சாலைகளில் சாவகாசமாக நடந்து செல்வதையும் பார்க்க முடிகிறது. இதன்மூலம் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு அர்த்தமற்றதாக மாறிவிடமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் இன்னும் விழிப்புடன் இருந்து கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாப்பதுடன், மற்றவர்களுக்கு பரவுவதையும் கட்டுப்படுத்த வேண்டும்.
 
இதற்கிடையே ஊரடங்கு உத்தரவை மீறும் பொதுமக்களுக்கு தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவ் கண்டிப்புடன் கூடிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

‘அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த ராணுவம் அழைக்கப்பட்டது. எனவே, மக்கள் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், 24 மணி நேர ஊரடங்கை விதிக்க வேண்டிவரும். தேவையின்றி நடமாடுவோரை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும். அதுபோன்ற நிலைமையை ஏற்படுத்திவிடக்கூடாது என்று மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்’ என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.