சென்னை சோழிங்கநல்லூரில் அரவிந்த்ரமேஷ் எம்எல்ஏ இல்லத் திருமண நிகழ்ச்சி நேற்று  நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது கோடநாடு விவகாரத்தில் நியாயமாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர்  பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணைக்கு தன்னை ஆட்படுத்தி இருந்தால் அவரை பாராட்டி இருக்கலாம் என தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது நான் குற்றம் சொல்வதால் என் மீது அவர் வழக்கு போடத் தயாரா? எனவும்  ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இப்போது மற்றொரு  செய்தியும்  வருகிறது. அது தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது அறையில் நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தி இருக்கிறார் என்பதுதான் அது.

எதற்கு இந்த யாகம்? ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றது போல் கொடநாடு வழக்கு முடியும் போது எடப்பாடி பழனிசாமி சிறைக்கு சென்றுவிடுவார். முதலமைச்சர் பதவி காலியாக போகிறது என்பதால் அதை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக சொல்கிறார்கள்.

முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு யாகம் நடத்தினாரா? அல்லது அங்குள்ள கோப்புகளை எடுத்ததற்காக யாகம் நடத்தினார்களா? என்பதற்கு ஓ.பன்னீர் செல்வம் பதில் சொல்லியே தீர வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்தார்..

வருகிற நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகசட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்க வாய்ப்புஉள்ளது. எனவே மத்தியிலும், மாநிலத்திலும்நல்லாட்சி அமைய நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என ஸ்டாலின்  பேசினார்.