அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. செயற்குழுவில் இதுதொடர்பாக காரசார விவாதம் நடந்த நிலையில், அக்டோபர் 7-ம் தேதிக்கு முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிக்க அதிமுகவில் நாள் குறித்துள்ளார்கள். அதிமுகவிலிருந்து வரும் தகவல்படி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவே கூறப்படுகிறது.
அதவாது, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியே அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தொடர்வதாக கூறப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது, அவருடன் வந்த நிர்வாகிகள்கூட, தற்போது ஓபிஎஸை சமாதானம செய்வதிலேயே குறியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே துணை முதல்வர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்யப்போவதாகவும் கடந்த இரு தினங்களாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால், அந்த ரிஸ்க்கை பன்னீர்செல்வம் எடுக்கமாட்டார் என்றே அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. கடந்த 2017-ல் அணிகள் இணைந்த பிறகு ஆட்சி எடப்பாடிக்கு கட்சி பன்னீர்செல்வத்துக்கு என்று முடிவானது. எனவே, கட்சிக்கு தான்தான் தலைமை வகிக்க வேண்டும் என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 
இந்நிலையில் நேற்று தேனி செல்ல பன்னீர்செல்வம் முடிவு செய்திருந்தார். ஆனால், அந்தப் பயணத்தை ரத்து செய்த பன்னீர்செல்வம் சென்னையிலேயே தங்கிவிட்டார். மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி அவருடைய மணிமண்டபத்தில் ஓபிஎஸ் இன்று அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ஓபிஎஸ் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. செய்தியாளார்களை சந்தித்து, தன்னுடைய நிலைப்பாடு குறித்து பன்னீர்செல்வம் அறிவிப்பார் என்றும் ஓபிஎஸ் தரப்பில் கூறப்படுகிறது.