நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசும் மத்தியில் ஆளும் பாஜகவும் இணைந்து கூட்டணி அமைத்தது. பாஜக 5 தொகுதிகளிலுமே மண்ணைக் கவ்வியது. தேனி மட்டும் அதிமுக கைப்பற்றியது. 

அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சியாக இருந்தபோது கமல்ஹாசன் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற பேச்சுக்கு இருகட்சிகளும் கடும் எதிர்ப்பை காட்டின. இந்தியாவின் பல இடங்களில் கமலஹாசனுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ‘நாக்கை அறுப்பேன்' என்று காட்டமாக பதிலளித்திருந்தார். அதிமுக அரசின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் மிகவும் மோசமாக கமல் தன் மகளுடன் இணைந்திருக்கும் படத்தை போட்டு ஒரு பக்க கட்டுரையையும் வெளியிட்டிருந்தது. 

அம்மா நாளேட்டில் ‘பொலி காளைக்குப் புரியுமோ புனிதமிகு இந்து தர்மம்' என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. செய்தியின் அருகில் கமல் தனது மகள் ஸ்ருதிஹாசனுக்கு முத்தமிடும் புகைப்படத்தையும் பிரசுரித்தனர். கமலைப் பொலிகாளை என்றும் செய்திக்கு துளியும் சம்மந்தம் இல்லாத புகைப்படத்தை வைத்தும் அருவருக்கத்தக்க வகையில் இந்த செய்தி உள்ளதாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனம் எழுந்தது. கூட்டணியின் போது பாஜகவின் நாளேடு போன்றே செயல்பட்டு பேசியது நமது அம்மா நாளிதழ். 

இரண்டு நாளுக்கு முன் பாஜகவைத் தாக்கி குத்தீட்டி என்ற பெயரில் கட்டுரை எழுதப்பட்டு வந்தது. மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாத நிலையில் இந்த விமர்சனம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. `நமது அம்மா' நாளிதழில் ஜூன் 2-ம் தேதியன்று, 'நாடும் மொழியும் நமக்கிரு கண்கள்' என்ற தலைப்பில் வெளியாகிய கட்டுரையில் ''தமிழகத்தில் 1965-ல் ஏற்பட்ட மொழிப்போர்தான், காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் புதைசேற்றில் தள்ளியது. 

இன்று வரை அந்தக் கட்சியால் மீண்டெழ முடியவில்லை. அதன் பிறகு, தேசத்தை ஆளவந்த அத்தனை அரசுகளும் கடந்த காலத்தை மனதில்கொண்டு அவசியமற்ற மொழித்திணிப்பைச் செய்யவில்லை. தேசியக்  கல்வித் திட்டங்கள் வாயிலாக மொழித் திணிப்புகள், சில தருணங்களில் முன்வைக்கப்பட்டபோது அவற்றுக்கு எதிராக எழுந்த எதிர்ப்பால் அத்தகைய முயற்சிகள் கைவிடப்பட்டன. ஆகவே, இனம், மொழி உள்ளிட்ட உணர்ச்சிகளாலும் சுயமரியாதையாலும் இனமானத்தாலும் கட்டி எழுப்பப்பட்ட விவகாரங்களில் நிதானத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிப்பது ஒன்றே வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் என்பதை ஆட்சியில் இருப்போர் புரிந்துகொள்வது உத்தமம்'' என்று மும்மொழிக் கொள்கையைக் கையில் எடுத்திருக்கும் மத்திய பாஜக அரசைக் குத்திக்காட்டி எழுதப்பட்டிருந்தது. 

இன்று இதற்கு பதிலடியாக பாஜகவின் ஆதரவு இதழான துக்ளக் இதழில் அதிமுக அமைச்சர்களை எச்ச சோறுக்கு காத்திருப்பவர்களாக கருதி துணுக்கு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பாஜக அமைச்சர்கள் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருக்க “உஸ்ஸ்… யாரும் அழப்படாது.. நம்பளையெல்லாம் உள்ளே கூப்பிட மாட்டாங்க… கடைசியா... ஏதாவது மிச்சம் மீதி இருந்தா போடுவாங்க” என்று போட்டு ஜன்னலுக்கு வெளியே ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உருவங்கள் நிற்கின்றன. இந்த விஷயங்கள் கூட்டணியின் விரிசல் விழுந்து விட்டது என்பதற்கான அறிகுறிகளாகவே பலரும் பார்க்கின்றனர்.

இந்நிலையில் நேற்று குருமூர்த்தியை தனது மகனுடன் போய் சந்தித்த ஓ.பி.எஸ் இப்படியெல்லாம் கார்டூன் போட்டு எங்களை நோகடிக்காதீர்கள் என வருத்தப்பட்டுள்ளார். அதனை கண்டு கொள்ளாமல் மற்ற விஷயங்களை பற்றி பேச்சை மாற்றி விட்டாராம் குருமூர்த்தி.