சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி ஓபிஎஸ் பேசியது சரிதான்.. அதகளப்படுத்தும் ஜே.சி.டி.பிரபாகர்..!
சசிகலாவை சேர்ப்பது குறித்த ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்துக்கு ஜெயக்குமார், கே.பி.முனுசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவு நிர்வாகிகள் அடுத்தடுத்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி, அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சசிகலாவை சேர்ப்பது பற்றி தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என ஓபிஎஸ் கூறியது சரியே என அதிமுக அமைப்பு செயலாளர் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார்.
சசிகலாவை அதிமுகவுக்குள் சேர்ப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவெடுக்கும் என்று மூன்று தினங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் பற்ற வைத்த நெருப்பு காட்டுத் தீ போல எரிந்து வருகிறது. சசிகலாவை காட்டமாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததாலேயே, முக்குலத்தோர் சமூகத்தினரைச் சமாதானப்படுத்துவதற்காக ஓபிஎஸ் இப்படி பேசியதாக ஒரு விதமாக பேசப்பட்டு வருகிறது.
மற்றொரு புறம் சசிகலாவை சேர்ப்பது குறித்த ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்துக்கு ஜெயக்குமார், கே.பி.முனுசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவு நிர்வாகிகள் அடுத்தடுத்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி, அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக அமைப்பு செயலாளர் ஜேசிடி பிரபாகர்;- சசிகலாவை இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் பேசி முடிவெடுப்பார்கள் என்றுதான் ஓ.பி.எஸ் கூறினார். அதில் என்ன தவறு உள்ளது. தலைமைக்கு கட்டுப்படுவதில் ஓ.பி.எஸ்.க்கு நிகர் யாரும் இல்லை என்றார்.
தர்மயுத்தம் மூலம் இணையும்போது யாரையும் சேர்க்க கூடாது என சொன்னதை இப்போது ஒப்பிட முடியாது. அதிமுகவின் எதிர்கால நலன்களை கருதி தலைமை நிர்வாகிகள் முடிவெடுக்க வேண்டும். ஓபிஎஸ், இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை என நம்புகிறேன். எம்ஜிஆரை கட்சியில் இருந்து நீக்கியதற்கு கருணாநிதி மட்டும் காரணமில்லை, உடன் இருந்தவர்களும் தான். அதிமுக தொண்டர்கள் யாரும் சசிகலவை அவரது சுற்றுப்பயணத்தில் சந்திக்க மாட்டார்கள் என்றார்.