எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்று தம்பிதுரை கூறினார். சென்னை விமான நிலை யத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும் என ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். அவர் கூறியது, எம்ஜிஆரின் நடைமுறையை பின் பற்றுவதுபோல் இருக்கிறது.

காரணம், எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, தேர்தலுக்கு 5 ஆண்டுகள் இருந்தாலும், ஆரம்பத்தில் இருந்தே கட்சியினரை தேர்தல் பணி போல் சுறுசுறுப்பாக செயல்படுங்கள் என்று தீவிரப்படுத்துவார். நாங்களும் அதேபோல் செயல்பட்டு மக்கள் பணியாற்றினோம்.

வரும் உள்ளாட்சி தேர்தல், 2019ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தல், அதை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தல் அனைத்தையும் மனதில் வைத்துதான் அவர் அப்படி கூறியிருக்கிறார்.

நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக, சுறுசுறுப்பாக செயல்பட்டு அதிமுக ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்துவோம். அதோடு, சட்டசபை தேர்தல் என்றாலும் சரி, உள்ளாட்சி தேர்தல் என்றாலும் சரி, எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.