மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஒரே ஒரு வேட்பாளர் ஓபிஎஸ்ன் மகன் மட்டும் வெற்றி பெற்றார். அவருக்கு எப்படியாவது மத்திய அமைச்சர் பதவி வாங்கிவிடலாம் என ஓபிஎஸ் தீவிர முயற்சி மேற்கொண்டார். 

ஆனால் இபிஎஸ் ஆதரவாளர்களும் மத்திய அமைச்சர் பதவி கேட்டதால் ஓபிஎஸ் மகனுக்கு மஅமைச்சர் பதவி கிடைக்கவில்லை.

இந்நிலையில் நாளை டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி மாநாட்டில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்.. இதற்காக  ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு டெல்லி செல்கிறார். டெல்லியில் நாளை பிற்பகல்  2 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

டெல்லி செல்லும் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்படும். குறிப்பாக, அதிமுகவில் தற்போதுள்ள இரட்டை தலைமையை நீக்கி விட்டு ஒற்றை தலைமை முறையை கொண்டுவர வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். 

இது சம்பந்தமாக நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அமலும் தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்டு மீண்டும் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக எடப்பாடி - ஓபிஎஸ் இருவரும் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட ஓபிஎஸ் கோவையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து நேற்று இரவுதான் சென்னை திரும்பினார். 

தொடர்ந்து, இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.