இன்னும் ஓரிரு நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் அணி காணாமல் போகும் என, அதிமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர்  சசிகலா – ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக அதிமுக செயல்படுகிறது. இதில், சசிகலா அணியில் இருந்த பலர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த சிலர், அதிமுக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலையில், நேற்று மீண்டும் இணைந்தனர்.

இதற்கான நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது, டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மறைவுக்கு பின், பி.எச்.பாண்டியன் பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டார். இதனால், தற்போது ஓ.பி.எஸ். அதிமுகவில் இருந்து விலகி, தனி அணியை உருவாக்கியுள்ளார். மேலும், பி.எச்.பாண்டியனுடன் சேர்ந்து அவரும் சதிவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இவர்களது சதிவேலைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். இன்னும் ஓரிரு நாட்களில் ஓ.பி.எஸ். கூடாராம் காலியாக போகிறது. அந்த அணியினர் காணாமல் போய்விடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.