எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம், செம்மலை உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டு அணியாக பிளவுபட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டது. இதற்கிடையில் முதல்வராக பொறுப்பேற்க சசிகலா முயற்சித்தார். ஆனால் அது முடியாமல் போனது. அதைத்தொடர்ந்து சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

அப்போது சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.

பின்னர் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. இந்நிலையில் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இன்று விசாரித்து வருகிறது.