ops team complaint against sasikala

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்பது குறித்த புகாருக்கு சசிகலா விளக்கம் அளித்த நிலையில், அதற்கான 61 பக்கம் கொண்ட பதில் மனுதாக்கலை ஒ.பி.எஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜெயலலிதா மறைவிற்கு முன்பு சசிகலாவும், ஒ.பி.எஸ்சும் ஒரே அணியாக செயல்பட்டு வந்தனர். டிசம்பர் 5 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தார்.

இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும், முதலமைச்சராக ஒ.பி.எஸ்சும் பொறுப்பேற்றனர். பின்னர், ஜல்லிக்கட்டு, மேகதாது அணை உள்ளிட்ட பிரச்சனைகளில் ஒ.பி.எஸ் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கான புகழ் மக்கள் மத்தியில் ஓங்க ஆரம்பித்தது.

ஆனால் திடீரென சசிகலாவை சட்டமன்ற குழு தலைவராக அதிமுக அமைச்சர்கள் தேர்வு செய்தனர். இதனால் ஒ.பி.எஸ்சும் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க பன்னீர்செல்வமே முன்மொழிந்தார்.

இந்நிலையில், இரண்டு நாட்கள் மவுனம் காத்த பன்னீர்செல்வம் திடீரென ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து எழுந்து சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

அப்போது, சசிகலாவால் தான் மிரட்டப்பட்டதாகவும், அதனால் தான் நான் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது எனவும் சசிகலாவின் முதல்வர் கனவில் இடியை தூக்கி போட்டார்.

அவருக்கு சில அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், மூத்த நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், அடிமட்ட தொண்டர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையே சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏக்களின் பட்டியலை ஆளுநரிடம் அளித்தும் அவரை பதவி ஏற்க கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுக்கவில்லை. இது சசிகலா தரப்பில் இருக்க பீதியை கிளப்பியது.

பின்னர், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என நீதிமன்றம் தீர்பளித்ததால் அவர் சிறைக்கு சென்றார். சிறைக்கு செல்லும் முன்பு அவர் எடப்பாடி முதலமைச்சர் ஆகும் வகையில் வழிவகை செய்தார். மேலும் அவரது உறவினரான டி.டி.வி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்து விட்டு சென்றார்.

இந்நிலையில், அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது எனவும், சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்க பட்டது செல்லாது எனவும் ஒ.பி.எஸ் அணியினர் மதுசூதனன் தலைமையில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட டி.டி.வி தினகரன், அதிமுக சட்ட விதிப்படியே சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பதில் மனுதாக்கல் செய்தார்.

இந்த பதிலை ஏற்க தேர்தல் ஆணையம் நிராகரித்தது. டி.டிவி தினகரன் அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. சசிகலா கையொப்பமிட்ட பதிலை தான் ஏற்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

பின்னர் சிறையில் இருந்த சசிகலா தனது கையொப்பமிட்ட அதே விளக்கத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார். இதுகுறித்து மார்ச் 14 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஒ.பி.எஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் 61 பக்கம் கொண்ட மனுவை மைத்ரேயன் எம்.பி தலைமையிலான ஒ.பி.எஸ் அணியினர் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து தேர்தல் ஆணையம் இந்த மனுத்தாக்கலை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.