ops talks about sasikala team atrocity

அதிமுக எந்த குடும்பத்திடமும் போக கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் சசிகலா தரப்பில் டிடிவி.தினகரன் போட்யிட்டார். எங்கள் அணியில் மதுசூதனனை போட்டியிட செய்தோம். தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு முறைக்கேடுகளை அவர்கள், செய்தார்கள்.

வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், தலா ரூ.4000 உள்பட பல்வேறு குளறுபடிகளை செய்தனர். இதைதொடர்ந்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளா ஆகியோர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது பல கோடி பணத்துக்கான ஆவணங்கள் சிக்கியது. இதை பற்றி வருமான வரித்துறையினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள்.

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கொடுக்க வேண்டும் என நாங்கள், தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம். அதற்கான பிரமாண பத்திரங்களை கொடுத்துவிட்டோம். இதுதொடர்பான விசாரணை நேற்று நடைபெற இருந்தது.

இதற்கிடையில், அந்த விசாரணை தங்களுக்கு சாதகமாக வர வேண்டும் என்ற அடிப்படையில் பணம் கொடுத்து தேர்தல் சின்னத்தை வாங்க முயற்சித்துள்ளனர். இது மத்திய உளவுத்துறை மூலம் தெரியவந்தது. அதன்பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் செய்தியாக வந்து கொண்டே இருக்கிறது.

சசிகலா தரப்பினர், தவறுக்கு மேல் தவறு செய்து தமிழகத்துக்கு அவப்பெயரை வரவழைத்துவிட்டனர். அதிமுக எந்த குடும்பத்தினரிடமும் போக கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு.

இவ்வாறு அவர் கூறினார்.