தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரும் சென்றுள்ளார். இந்த டெல்லி பயணம் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே கருதப்படுகிறது. முன்னதாக எஸ்.பி.கே நிறுவனம் உரிமையாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் செய்யாதுரை சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 

அதில் 180 கோடி ரூபாய் பணம் மற்றும் 105 கிலோவுக்கு மேற்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளனர். இந்த ஊழலில் அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக செய்யாதுரை மகன்களுக்கு தனித்தனியாக சம்மன் அனுப்பப்பட்டது. வருமானவரித்துறை அலுவலகத்தில் செய்யாதுரை மற்றும் அவரது மகன் நாகராஜன் இருவரும் இன்று ஆஜராகினர். 

இந்நிலையில் இன்று எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஊழல் புகார் தொடர்பாக மனு அளித்துள்ளார். அதில் வருமானவரி சோதனைக்கு ஆளாகியிருக்கும் நாகராஜன், செய்யாதுறைஆகியோர் நெடுஞ்சாலை காண்டிராக்டர் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்மந்திகள் ஆவார்கள். இதற்காகவே இதுவரை 3 நிறுவனங்களுக்கு மட்டும் 3020 கோடி ரூபாய் மதிப்புள்ள காண்டிராக்ட் வழங்கப்பட்டுள்ளது. அதே போல முதல்வர் மகனின் மாமனார் சுப்புரமணியன் நெடுஞ்சாலை ஒப்பந்தம் பெற்ற காண்டிராக்டராக இருக்கிறார். கடந்த 7 வருடமாக நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருக்கும் பழனிசாமி தற்போது தமிழகத்தின் முதல்வராக உள்ளார். இதனை பயன்படுத்தி, அவர் அவருடைய உறவினர்களுக்கு காண்டிராக்ட் வேலை வழங்கி வருகிறார்.

மத்திய அரசு பல திட்டத்திற்காக பல கோடியை ஒத்துக்குகிறது. ஆனால் அந்த தொகையிலும் முதல்வர் மற்றும் பல அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள் என்று மனுவில் கூறியுள்ளார். இந்த ஊழல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென டெல்லியில் வந்த அழைப்பின் பேரில் ஒபிஎஸ் டெல்லி சென்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.