Asianet News TamilAsianet News Tamil

திமுக என்கிற சுயநலம் விரைவில் புறக்கணிக்கப்படும்... ஓ.பன்னீர்செல்வம் சூளுரை!!

11 மருத்துவக் கல்லூரிகளை துவக்கிய அதிமுகவின் சாதனையை தனது சாதனையாக திமுக பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்தாக உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

Ops statement about medical colleges in tamilnadu
Author
Tamilnadu, First Published Jan 14, 2022, 4:38 PM IST

11 மருத்துவக் கல்லூரிகளை துவக்கிய அதிமுகவின் சாதனையை தனது சாதனையாக திமுக பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்தாக உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சென்னை, அடையாரில் உள்ள க்ரீக் பகுதியில் அமைக்கப்பட்ட பூங்கா, மகிந்திரா சிட்டியில் அமைக்கப்பட்ட பி.எம்.டபிள்யு தொழிற்சாலை, ஓரகடம் பகுதியில் அமைக்கப்பட்ட வாகன பரிசோதனை மையம் போன்ற பல திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டது போன்ற மாயத் தோற்றத்தை தி.மு.க. தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தியது. அந்த வகையில், 12-01-2022 அன்று பாரதப் பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளும் தி.மு.க. அரசின் சாதனை போல சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முனைப்பான, ஆக்கப்பூர்வமான, இணக்கமான நடவடிக்கைகளின் காரணமாக தமிழ்நாட்டில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுறும் தருவாயில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, தி.மு.க. ஆட்சியில் மேற்படி 11 மருத்துவக் கல்லூரிகள் பாரதப் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டன. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் 2006 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கத் திட்டமிடுதல்களைச் செய்திருக்கிறோம் என்றும், அது இப்போது நிறைவேறியிருப்பதைப் போலவும், மருத்துவத் துறையில் இந்திய நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்றும் பேசியிருக்கிறார்.

Ops statement about medical colleges in tamilnadu

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒரு திட்டமிடுதலும் நடைபெறவில்லை என்பதுதான் உண்மை. 2006 முதல் 2011 வரை தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி, மத்தியில் தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி. மத்திய அரசுடன் தி.மு.க. இணக்கமாக, நெருக்கமாக, செல்வாக்காக இருந்த இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் விழுப்புரம், திருவாரூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் மூன்று மருத்துவக் கல்லூரிகள்தான் திறக்கப்பட்டன. தி.மு.க. தலைவர் நினைத்திருந்தால் அப்பொழுதே அனைத்து மாவட்டங்களுக்கும் மருத்துவக் கல்லூரிகளைப் பெற்று இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் அதற்கான பெருமையை தி.மு.க. பறைசாற்றிக் கொள்வதில் ஓர் அர்த்தம் இருக்கும். இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் சாதிக்காத வகையில், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் என்ற சாதனையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செய்திருக்கிறது என்றால் அதனைப் பாராட்ட மனமில்லாமல், கலைஞரின் கனவு நிறைவேறி இருக்கிறது என்று சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அம்மா அவர்களின் கனவு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கனவு நிறைவேறி இருக்கிறது. இன்றைக்கு மருத்துவத் துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

Ops statement about medical colleges in tamilnadu

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஒருபடி மேலே போய் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு கடந்த 2011 ஆம் ஆண்டு பிப்ரவரியிலேயே அரசாணை தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போதே வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக அரசு தாங்கள் தான் கொண்டு வந்தார்கள் என்று கூறுகிறார்கள். உண்மையிலேயே அதிமுகவால் தான் இது தாமதமானது. அதுமட்டுமின்றி அதிமுகவால் தான் மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது என்று மார்தட்டிக் கொள்வதில் நியாயம் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆட்சியை விட்டு போகும் தருவாயில் மக்களை ஏமாற்றுவதற்காக ஓர் அரசாணையை வெளியிட்டுவிட்டு அதை ஒரு சாதனை என்று கூறுவது வெட்கக்கேடானது, நியாயமற்றது. கிட்டதட்ட 17 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, பொதுநலக் கோரிக்கைகளான மாநில சுயாட்சி குறித்தோ, கல்வியை மாநிலப் பட்டியலில் எடுத்து வருவது குறித்தோ, தமிழ்நாட்டிற்கான மத்திய வரிப் பகிர்வு குறைந்து கொண்டே வருவது குறித்தோ, மேல்வரி குறித்தோ, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி குறித்தோ வாய் திறக்காமல் மவுனியாக இருந்துவிட்டு, சாதனை படைத்திட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை குறை கூறுவது கடும் கண்டனத்திற்குரியது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கேற்ப, தி.மு.க. என்கிற சுயநலம் விரைவில் புறக்கணிக்கப்பட்டு மீண்டும் அ.இ.அ.தி.மு.க. என்கிற பொதுநலம் வீறுகொண்டு எழும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios