ops speech
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி. தினகரனும் கூட்டாளிகள் என்றும், இரு அணிகள் இணைப்பு எனக்கூறி இருவரும் ஏமாற்றுகிறார்கள் என ஓபிஎஸ் பகிரங்கராக குற்றம்சாட்டினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சசிகலா, ஓபிஎஸ் என இரு பிரிவுகளாக பிரிந்தது. அண்மையில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்ட பிறகு இரு அணிகளும் இணைவது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் இரு அணியில் உள்ள தலைவர்களும் தங்கள் இஷ்டப்படி பேசியதால் இணைப்பு நடவடிக்கையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
ஓபிஎஸ் அணியினர் விதித்த நிபந்தனைகளை மீறி எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் எனவும் டி.டி.வி.தினகரன் துணைப் பொதுச் செயலாளர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததது
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் தரப்பினர் இணைப்பு வேலைகளை தள்ளிப் போட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற மே தின விழா பொதுக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், தேர்தல் பிரமாண பத்திரத்தில் சசிகலா மற்றும் தினகரன் பெயரை நீக்காமல் அனுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமியை எப்படி நம்புவது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு குடும்பத்திற்குள் சிக்கி விடாமல் அதிமுகவை மீட்கவே தர்மயுத்தம் தொடங்கப்பட்டது. ஆனால் எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருமாதிரியாக பேசி வருவதாக குற்றம் சாட்டினார். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள், அவிழ்க்கப்பட வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் உன்றும் ஓபிஎஸ் வலியுறுத்தினார்.
