அணிகள் இணைப்புக்கு பிறகு துணை முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், திருச்சி அருகே திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார்.

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அணிகள் இணைப்புக்குப் பிறகு, பொதுக்குழு கூட்டப்பட்டு சசிகலா நீக்கம் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க காரணமானவர் சசிகலா என்றும், அவரையே கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கூறுவது வேதனை அளிப்பதாக உள்ளது என்று டிடிவி தினகரன் தரப்பினர் கூறி வருகின்றனர்.

அதேபோல், எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் அவர்கள் கூறினர். மேலும், எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் நிலையில், குதிரைபேரத்துக்கு இடமளிக்காமல், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம், துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, இன்று திருச்சி அருகே உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றார்.

திருப்பட்டூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அவருடன், அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.