மக்களின் கஷ்டத்தைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாதவர்கள் சிஸ்டத்தைப் பற்றி பேசுகிறார்கள் என்றும்,  சிலர் கருத்துக் கந்தசாமியாகவே மாறிவிட்டார்கள் என்றும் நடிகர்கள் ரஜினி, கமலை கிண்டல் செய்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அதிமுக என்ற இந்த யானையை பூனைகளால்  அசைக்க முடியாது என கூறினார்.

முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அதிமுக அரசின் ஓராண்டு சாதனையில் மக்களுக்கும், விசுவாசத் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. ஆனால் நம்மை எதிர்ப்பவர்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி என ரைமிங்காக பேசினார்.

எதிர்க்கட்சியினர் நமக்கு எதிராக தொடுத்த அத்தனை அஸ்திரங்களையும், தர்மத்தின் வழியிலே, சத்தியத்தின் வழியிலே தகர்த்தெறிந்தோம். எதிர்கட்சியினர் என்ன விமர்சனம் செய்தாலும், நாங்கள் கவலைப்படவும் இல்லை, கலங்கவும் இல்லை, பயமும் இல்லை. கவலைப்படுவதும், கலங்கி நிற்பதும் எதிர்கட்சியினர் தான் என ஓபிஎஸ் கூறினார்.

இப்போது புதிது புதிதாக சிலர் வந்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் கஷ்டத்தைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாதவர்கள் சிஸ்டத்தைப் பற்றி பேசுகிறார்கள். சிலர் கருத்துக் கந்தசாமியாகவே மாறிவிட்டார்கள். அரசியலை பற்றியே தெரியாமல், அரசியல் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கும் மக்கள் போடப்போவது பூஜ்யம் தான் என்பது உறுதியாகியுள்ளது எனவும் துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு பிறகு இந்த ஆட்சி நிலைக்காது, நீடிக்காது என்று பரபரப்பாக பேசியவர்களும், அடுக்கடுக்காக அறிக்கைகள் விட்டவர்களும், ஆரூடம் கூறியவர்களும், ஆடி அடங்கிப்போய்விட்டார்கள். அவர்கள் சொன்ன அத்தனையும் பொய்யாக்கி ஜெயலலிதாவின் ஆட்சியை மட்டுமே உண்மையாக்கி நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என ஓபிஎஸ் தெரிவித்தார்.