நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் உறுப்பினர்கள் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற இணையத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு எம்.பி.க்களின் செயல்பாடுகள், வருகைப்பதிவு போன்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அதிமுக கூட்டணி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கடைசி இடத்தில் உள்ளார். அவரது வருகைப்பதிவு 15 சதவிகிதம் மட்டுமே என்கின்றனர். மக்களவையில் குறைந்த செயல்பாட்டை கொண்ட எம்.பி.யாக ஜெகத்ரட்சகன் உள்ளார். இவர் 46 சதவீதம்.  இந்த ஆண்டில் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் இரு விவாதங்களில் மட்டுமே பங்கேற்றிருக்கிறார். அதே போல் எந்த ஒரு தனி நபர் மசோதாவும் கொண்டு வரவில்லை என்றும் கூறுகின்றனர்.  கடந்த 2014-ம் ஆண்டு தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
தமிழகத்தின் 39 மக்களவை எம்.பி-க்களில் மூன்று பேர் 100 சதவிகிதம் வருகைப்பதிவும், 9 பேர் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான வருகைப் பதிவை வைத்து இருப்பதாகவும் அந்த இணையத்தில் கூறப்பட்டு உள்ளது. அ.தி.மு.க சார்பாக மக்களவைக்குத் தேர்வான ரவீந்திரநாத் குமார் இதுவரை நடைபெற்ற 42 விவாதங்களில் பங்கேற்று உள்ளார். தமிழக எம்.பி-க்களில் அதிக எண்ணிக்கை விவாதங்களில் கலந்து கொண்டவர். இவரது வருகைப் பதிவு 79 சதவிகிதம். அதிமுக சார்பாக தமிழகத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே எம்.பி ரவீந்திரநாத் குமார் மட்டுமே.