ஒற்றை ஆளாய் மக்களவைக்கு சென்றாலும் பாஜக அதிமுக உறுப்பினரான ஓ.ரவீந்திரநாத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய போது முக்கிய தலைவர்களான ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கிரி உள்ளிட்ட முக்கிய தலைகளே இருந்த கூட்டத்தில் ஓ.பி.ரவீந்திரநாத்தும் சரிக்கு சமமாக உட்கார வைக்கப்பட்டார். 


நேற்று பதவியேற்கும் போது தமிழ் வாழ்க  என திமுகவினர் எழுப்பிய கோஷங்களை முன் வைக்காமல் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என கூறியதன் மூலம் பாஜகவினரை வெறுப்பேற்றக் கூடாது, அதிருப்தியடைய வைக்கக் கூடாது என்பதில் ஓபிஎஸ் மகன் கண்ணும் கருத்துமாக இருந்தார். பர்ஸ்ட் இம்ப்ரஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்பதற்கேற்ப முதல் நாளிலேயே பாஜக எம்பிக்களின் பாராட்டுகளையும் பெற்று விட்டார் ஓ.பி.ஆர். 

இன்று 17-வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லாவை பிரதமர் மோடி முன்மொழிந்தார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்கரி ஆகியோர் வழிமொழிந்தனர். அவர்கள் வரிசையில் ஓம் பிர்லாவை ஓ.பி.ரவீந்திரநாத் குமாரும் வழிமொழிந்தார். அப்போது பேசிய அவர், "தேனி மக்களவை உறுப்பினராக நான் வருவதற்கு காரணமாக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போல ஏழைகளுக்கான திட்டங்கள் மீதான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.


மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை செய்து தருவார் என நம்புகிறோம்" என அசத்தலாக பேசினார். ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்ததன் மூலம் அதிமுக தொண்டர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளார். பாஜக கூட்டணியில் இடம்பெற்றதை மகிழ்ச்சியோடு தெரிவித்ததை பாஜக எம்.பிகள் வரவேற்றுள்ளனர். இதை கூறும்போது மோடியின் முகத்தில் மகிழ்ச்சி வெளிப்பட்டது. அதேவேளை அதிமுக ஆளும் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை முதல் பேச்சிலேயே கோரிக்கையாக வைத்திருப்பதையும் அதிமுகவினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ஜெயலலிதாவுக்கு பணிவோடு இருந்ததால் பெரும் பதவிகளை பிடித்தார் அவரது தந்தை ஓ.பன்னீர்செல்வம். தேனியில் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியின் காலில் விழுந்தபோதே ஓ.பி.ஆர் பணிவில் பதினாறு அடி பாய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தக் கணிப்புகளுக்கு மேலும் வலுச்சேர்த்து வருகிறார் ஓ.பி.ஆர்.