தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் காசி அன்னபூரணி கோவில் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த கோவிலில் புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுரம் கும்பாபிஷேகம் கடந்த 16-ந்தேதி நடந்தது. இதையொட்டி கோவிலில் 2 கல்வெட்டுகள் திறக்கப்பட்டன. அதில் ஒரு கல்வெட்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மற்றொரு கல்வெட்டில் துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம், அவருடைய மகன்கள் ப.ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்று இருந்தன. இதில் ஜெயபிரதீப் என்பதற்கு பதில் ஜெயபிரதீப்குமார் என்று இருந்தது. அத்துடன் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் பெயருக்கு முன்பு, ‘தேனி பாராளுமன்ற உறுப்பினர்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

அவர், தேனி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கையே

நடக்காத நிலையில் அவரை எம்.பி.யாக சித்தரித்து கல்வெட்டு வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது

இதையடுத்து நேற்று முன்தினம் அந்த கல்வெட்டு மீது மற்றொரு கல்வெட்டு வைத்து பெயர் மறைக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அ.தி.மு.க. சார்பில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் நேற்று ஒரு புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில்  கல்வெட்டு வைத்ததாக குச்சனூரை சேர்ந்த  கோவில் நிர்வாகியான வேல்முருகன்  என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர் பணி நிக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் ஏட்டு.

அதிமுகவின் தீவிர விசுவாசியான இவர், பணியில் இருக்கும்போதே, ஜெயலலிதா குறித்து பெயர் குறித்து ஈவிகேஎஸ்.இளங்கோவனை கைது செய்ய வேண்டுமென போலீஸ் சீருடையுடன் தேனியில் போராட்டம் நடத்தியவர்.

ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் , 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு வந்தபோது, சென்னையில் சீருடையுடன் இவர் தீக்குளிக்க முயன்றார். கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா உடல்நிலை மோசமடைந்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவர் நலம் பெற வேண்டி தேனி விநாயகர் கோயில் முன்பு போலீஸ் சீருடையுடன் முடி காணிக்கை செலுத்தினார். இதையடுத்து  வேல் முருகன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.