நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்காமல் துணைமுதல்வர் மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமார் புறக்கணித்துள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. இதனால் அதிமுக கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. பின்னர் மத்திய அமைச்சர் பதவி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் முதல்வர் சில உள்ளடி வேலைகளை செய்து அதை தடுத்துவிட்டார். இதனால் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் கடும் கோபத்தில் இருந்து வந்தனர். 

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடியை டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம், மாநிலங்களவை எம்.பி. விஜிலா சத்யானந்த் மற்றும் தம்பிதுரை உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். 

வழக்கமாக, தமிழக முதல்வர் டெல்லி செல்லும்போது அதிமுகவை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் அவரை வரவேற்க விமான நிலையம் செல்வது வழக்கம். ஆனால், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக சார்பில் முதன்முறையாக தேனி தொகுதியில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் டெல்லி விமான நிலையத்திற்கோ, தமிழ்நாடு இல்லத்துக்கோ சென்று முதல்வரை வரவேற்பதை புறக்கணித்துள்ளார். 

இதனால் முதல்வருக்கும் மற்ற அதிமுக நிர்வாகிகளுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணிக்கும் இடையே நடக்கும் பனிப்போர் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.