வேலூரில் அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், ஓபிஎஸ் மகனின் பேச்சு இருந்ததாக என்று அக்கட்சிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது.

வேலூரில் மக்களவை தேர்தல் 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரேவொரு தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்ட தேனியில் வெற்றி பெற்று ஒற்றை ஆளாய் நாடாளுமன்றத்திற்கு சென்றார். 

வேலூர் தொகுதி தேர்தல் நமது மானப்பிரச்னை. வெற்றி பெற தீவிரமாக உழைக்க வேண்டும் என்றும் அதிமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மக்களவை முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் பாஜகவை தவிர்த்து, தனியொரு ஆளாக முத்தலாக் மசோதாவிற்கு அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்து பேசினார். இது தமிழகத்தில் உள்ள சிறுபான்மையின மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

வேலூர் தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். எனவே முத்தலாக் சட்டம் தங்களுக்கு பாதகமாக இருக்கும் என்று அவர்களில் பெரும்பாலானோர் கருதுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டால், சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவிற்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் வேலூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெறுவது பெரும் சிரமம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.