ops revealed the reason why he resigned CM post last year

முதல்வராக தான் சிறப்பாக செயல்பட்டதால் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டடதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு முதல்வராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வம், திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு சசிகலா முதல்வராக ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, தன்னை கட்டாயப்படுத்தியதால் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறி, சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி, சசிகலா மற்றும் தினகரனை ஓரங்கட்டி விட்டு நீண்ட இழுபறிக்குப் பிறகு பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன.

பிரதமர் மோடி அறிவுறுத்தியதன் பேரிலேயே பழனிசாமி அணியுடன் இணைந்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார் பன்னீர்செல்வம். 

இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், தான் முதல்வர் பதவியை இழந்தது குறித்து கருத்து தெரிவித்தார். ஜல்லிக்கட்டு விவகாரத்தை திறம்பட கையாண்டது உட்பட முதல்வராக இருந்தபோது தான் சிறப்பாக செயல்பட்டதை சசிகலாவால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டதாகவும் அதனால் தான் பதவிவிலகியதாகவும் பன்னீர்செல்வம் விளக்கமளித்தார்.