ஜல்லிக்கட்டு தீர்ப்புக்கு திமுகவும், துரோக கூட்டமும் சொந்தம் கொண்டாடுவதா.? இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தொடர்பாக காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறு வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள ஓ.பன்னீர் செல்வம்  ஆன்லைன் பதிவுகளை ரத்து செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

OPS requests cancellation of cases filed in connection with jallikattu competition

ஜல்லிக்கட்டு போட்டி- திமுக கூட்டணி

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்த நிலையில்,  காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுகட்டு என்பதெல்லாம் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடியாம் தமிழ்க்குடியின் வீர விளையாட்டு என்பதை மறந்து, 2011 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு காளைகளை காட்சிப் பட்டியலில் சேர்த்து ஜல்லிக்கட்டு வீர விளையாட்டிற்கு தடை விதித்த அரசு தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசு என்பதையும், பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் திரு. ஜெயராம் ரமேஷ் அவர்கள் செயல்பட்டார் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

OPS requests cancellation of cases filed in connection with jallikattu competition

ஜல்லிக்கட்டு தடை-காங்கிரஸ் காரணம்

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் பிராணிகள் நலப் பிரிவு ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்ததன் அடிப்படையில், தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசு, பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினைத் தடுத்தல் சட்டப் பிரிவு 22-ன்கீழ், புலிகள், கரடிகள் ஆகியவற்றுடன் காளைகளையும் சேர்த்து 11-07-2011 அன்று ஓர் அறிவிக்கையினை வெளியிட்டது. இந்த அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும், இல்லையென்றால் ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று தி.மு.க. அப்போதே அறிவித்து இருந்தால், ஜல்லிக்கட்டு என்கிற பிரச்சனையே வந்திருக்காது. இதனை தி.மு.க. செய்யாததுதான் ஜல்லிக்கட்டு தடைக்கு மூலக் காரணம்.

OPS requests cancellation of cases filed in connection with jallikattu competition

 பிரதமரை சந்தித்து சட்டத்திற்கு அனுமதி

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடத்தப்பட்டே ஆகவேண்டும் என்று மக்கள் ஒருசேர குரல் கொடுத்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டுமென்று நான் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை வலியுறுத்தி வந்தேன். இது குறித்து, 19-01-2017 அன்று நான் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து விரிவாக விவாதித்தேன். அப்போது, மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதாக  பாரதப் பிரதமர் அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள். இதன் தொடர்ச்சியாக,  ஒரே நாளில் மத்திய அரசின் சட்டத் துறை, சுற்றுச்சூழல் துறை, வனத் துறை என பல துறைகளின் அனுமதி பெறப்பட்டது. இதனையடுத்து 21-01-2017 அன்று அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து தடைகளும் நீக்கப்பட்டன. இந்த அவசரச் சட்டம், 23-01-2017 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

OPS requests cancellation of cases filed in connection with jallikattu competition

ஜல்லிக்கட்டு அனுமதிக்கு உரிமை கொண்டாடுவதா.?

இந்தச் சட்டத்தினை எதிர்த்து சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கினை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து, என்னால் கொண்டு வரப்பட்ட 2017 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி. உண்மை நிலை இவ்வாறிருக்க, அப்போதைய மத்திய அமைச்சர் திரு. ஜெயராம் ரமேஷ் அவர்களை எதிர்த்து போராட்டம்கூட நடத்த முடியாமல், ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக இருந்த தி.மு.க. இதற்கு சொந்தம் கொண்டாடுவதும், துரோகக் கூட்டம் உரிமை கொண்டாடுவதும் கேலிக்கூத்தாக உள்ளது.

OPS requests cancellation of cases filed in connection with jallikattu competition

ஆன்லைன் பதிவை நீக்குங்கள்

எது எப்படியோ, ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அனைவருக்கும் மன மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. ஜல்லிக்கட்டு தொடர்பாக, கட்டுப்பாடுகள் என்ற போர்வையில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும், ஆன்லைன் பதிவில் மிகுந்த சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அதனை ரத்து செய்ய வேண்டுமென்றும் விளையாட்டு வீரர்களும், காளை உரிமையாளர்களும் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இதனை நிறைவேற்றித் தரவேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு என ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டவர்கள்,உத்தரவை செயல்படுத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்-டிடிவி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios