நாளை நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின் கதாநாயகர் சபையின் நாயகர் தனபால் ஆவார். அவர் நியாயமாக நடக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஓபிஎஸ் தரப்பினர் வைத்துள்ளனர்.
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் அது பற்றி பல்வேறு ஊகங்கள் வெளியாகி உள்ளது. வலுவாக உள்ள எடப்பாடி தரப்பினர் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்கள் என்று கூறப்படுபவர்களை தொடர்ந்து 11 வது நாளாக ஒரே இடத்தில் ஒன்றாக தங்க வைத்துள்ளனர்.
இரு தரப்பையும் அழைப்பதில் குழப்பத்தில் இருந்த கவர்னர் ஓபிஎஸ் தரப்பினர் கோரிக்கையை புறக்கணித்து எடப்பாடி தரப்பை ஆட்சி அமைக்க அழைக்க நேற்று 31 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றது.

15 நாளைக்குள் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டார். ஆனால் இரண்டு நாளில் தான் பெரும்பான்மையை நிருபிக்க உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததால் நாளை சட்டமன்றம் கூட உள்ளது. காலை 11 மணிக்கு கூட உள்ள சட்டமன்றத்தில் எடப்பாடி பெரும்பான்மையை நிருபிக்க உள்ளார்.
இதில் வாக்கெடுப்பின் போது சபாநாயகரின் முடிவே இறுதியானது. எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கும் முன்னர் தங்கள் தொகுதிக்கு சென்று வாக்காளர் மனநிலையை அறிந்து வாக்களியுங்கள் என்று பொன்னையன் , செம்மலை உள்ளிட்டோர் வேண்டுகோள் வைத்துள்ள நிலையில் , எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்னமும் கூவத்தூரிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது தங்களுக்கு மேலும் சந்தேகமளிப்பதாகவும். எம்.எல்.ஏக்களை ஏன் இன்னமும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வில்லை , இதிலிருந்தே வாக்கெடுப்பு எப்படி நடக்கும் என்பது தெரிகிறது. ஆகவே வாக்கெடுப்பு ரகசியமாக நடத்தப்படவேண்டும். அப்போதுதான் எம்.எல்.ஏக்கள் மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள் என்று ஓபிஎஸ் தரப்பினர் கூறுகின்றனர்.
இதையடுத்து இன்று சபாநாயகர் தனபாலை ஓபிஎஸ் ஆதரவு தரப்பினர் பொன்னையன் தரப்பில் சந்தித்து பேசினர். தலைமை செயலகத்தில் சபாநாயகரை சந்தித்த அவர்கள் நாளை நடக்கும் வாக்கெடுப்பில் சபாநாயகர் நியாமாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் , ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பொன்னையன் , பாண்டியராஜன் , செம்மலை உள்ளிட்ட ஓபிஎஸ் அணியினர் சபாநயகரை சந்தித்தனர்.
