ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. ஆர்கே நகர் இடைத் தேர்தலில் இரு அணிகளும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்து களம் இறங்கின. ஆனால், சின்னம் மட்டும் யாருக்கும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக, இரு அணிகளும் மீண்டும் ஓர் அணியாக சேரும் என அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் இதுவரை வரவில்லை.

இரட்டை இலை சின்னம் தங்களுக்கே வேண்டும் என கோரி இரு தரப்பினரும் டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு செய்து இருந்தனர். இதன் இறுதி விசாரணை, இன்று நடக்கிறது. இதன் முடிவில், இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என தெரியவரும்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், “இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். அதில், எவ்வித மாற்றமும் இல்லை. சசிகலா அணியும், நாங்களும் ஒன்று சேருவோம் என பேசப்படுகிறது.

அதுபற்றி யாரும் இதுவரை எங்களை அணுகவில்லை.ஒருவேளை யாராவது, மீண்டும் ஒரே அணியில் நாங்கள் சேர்வது குறித்து பேசினால், அதுபற்றி பரிசீலனை செய்யப்படும்” என்றார்.