ops pressmeet about joining with sasi team

அதிமுகவின் மற்றொரு அணி தலைவரான ஓ.பன்னீர்செல்வம், பெரியகுளத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

கடந்த 1972ம் ஆண்டு எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட கட்சி அதிமுக. சுமார் 16 ஆண்டுகள் மக்களுக்காக சேவை செய்த கட்சி, எம்ஜிஆரின் மறைவுக்கு பின் ஜெயலலிதாவால் புத்துயிர் பெற்றது.

மக்கள் ஆட்சியாகவும், தொண்டர்கள் இயக்கமாவும் ஜெயலலிதா வழி நடத்தி வந்தார். எம்ஜிஆர் எப்படி எந்த ஒரு குடும்பத்தினரிடமும் சேரக் கூடாது என நினைத்தாரோ அதேபோல், ஜெயலலிதாவும் நினைத்தார். அதையே அவரும் கடைபிடித்தார். உறுதியாக இருந்தார்.

கடந்த 2011ம் ஆண்டு சசிகலாவையும், அவரது உறவினர்களையும் கட்சியில் இருந்தும், போயஸ் கார்டன் வீட்டில் இருந்தும் வெளியேற்றினார்.

பின்னர் 4 மாதத்துக்கு பின், சசிகலா எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தார். அதில், நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். அரசியலில் எந்த பொறுப்புக்கும் வரமாட்டோன். என் குடும்பத்தினர் உங்களுக்கு செய்த சதி, எனக்கு இப்போதுதான் தெரிந்தது என கூறினார்.

இதனால், அவரை மட்டும் உதவியாளராக வீட்டுக்குள் சேர்த்தார். அவரது குடும்பத்தினர் 16 பேரை, ஜெயலலிதா இறக்கும் வரை கட்சியில் உறுப்பினராகவும் சேர்க்கவில்லை. வீட்டிலும் சேர்க்கவில்லை. ஜெயலலிதாவின் நிலைப்பாடு இதுதான்.

எங்களது நிலைப்பாடு முழுவதும் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை முறை மட்டுமே. அதை வெளி கொண்டு வரவேண்டும். அதைத்தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.