இரு அணிகள் இணைப்பு தொடர்பாக இன்று மாலை நடைபெறவுள்ள ஆலோசனைக்கூட்டத்துக்குப் பின் முடிவு செய்யப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு  அதிமுக இரண்டாக உடைந்து  சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்து செயல்பட்டு வருகிறது.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் நடத்தி வந்தது.

இந்நிலையில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணிகளை இணைப்பது குறித்து பிரதமர் மோடியிடம் இரு தரப்பினரும் பேசியதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஓபிஎஸ் அணியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எடப்பாடி தரப்பினர் சொல்லி வந்தனர். அதன்படி தினகரனை முற்றிலும் ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அறிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், தங்களது கோரிக்கைகளை எடப்பாடி தரப்பினர் ஓரளவு நிறைவேற்றி இருப்பதாகவும்,இன்று மாலை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் இரு அணிகள் இணைப்பு குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.