Ops next chief minister Stalins good - she spoke to the soul of siddha

ஜெயலலிதா ஆன்மா புகுந்ததாக பேட்டி அளித்த சாமியார் ஒருவர் ஜெயலலிதா ஆன்மா பேசுவதாக கூறினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தனது ஆதரவு ஓபிஎஸ்சுக்குத்தான் , தீபா ஓபிஎஸ்சுடன் இணைய வேண்டும் என்று கூறினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருவாரூரை சேர்ந்த சாமியார் ஸ்ரீ மகரிஷி பார்மா . இவர் தனது பெயரில் சித்தர் சிகிச்சை மையம் நடத்தி வருகிறார். இவர் பெயரில் இன்று வாட்ஸ் அப்புகளில் ஒரு செய்தி வைரலானது. 

அதில் , ஆவிகளை அழைத்து பேசியதன் மூலம், பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்திய பிரபல சித்தர் ஸ்ரீ மகரிஷி பார்மா அவர்கள், இன்று ஜெயலலிதா மரணம் குறித்த அதிர்ச்சியூட்டும் பல்வேறு உண்மைகளை வெளியிடவுள்ளார். 

28 தேதி காலை 9:00 மணிக்கு தீபா வீடு இதனைத்தொடர்ந்து காலை 10:30 மணிக்கு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இல்லத்திற்குச் சென்று அவரிடமும் கூறவுள்ளார். அங்கே 11:30 மணிக்கு ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் வருகை தந்து பரபரப்பூட்டும் தகவல்களை சேகரித்துக் கொள்ளும்படியாக கேட்டுக்கொள்கிறோம்.

என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி பன்னீர்செல்வத்தை சந்திக்க இன்று பகல் 12 மணியளவில் சித்தர் மகரிஷி ஸ்ரீ பார்மா சபாரி சூட்டில் ஓபிஎஸ் வீட்டுக்கு வந்தார். 

காவி உடை அணிந்து வரும் சாமியார்களுக்கு மத்தியில் ‘சபாரி’ உடையில் வந்த இந்த சாமியாரை அங்கிருந்தவர்கள் வித்தியாசமாக பார்த்தனர். தன்னுடைய நீண்ட தாடியை தடவிக்கொண்டே உள்ளே சென்ற சாமியார், ஓபிஎஸ்சை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியே வந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மா எனக்குள் இருக்கிறது. இது சத்தியம், நிதர்சன உண்மையும் கூட. நான் திருவாரூரில் சித்த ஆஸ்பத்திரி நடத்தி வருகிறேன். ஒரு கோவிலும் கட்டி பராமரித்து வருகிறேன். 

2016-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 130 இடங்கள் கைப்பற்றும் என சரியாக கணித்து போயஸ் கார்டன் மற்றும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு மெயில் அனுப்பினேன்.

 2017-ம் ஆண்டு அ.தி.மு.க. எனும் கட்சி பாஜக பிடியில் இருக்கும் என்று கணித்து அதை மத்திய அமைச்சர் பொன்னாருக்கும் அனுப்பி இருக்கிறேன். தற்போது ஜெயலலிதாவின் ஆன்மா கேட்டுக்கொண்டதின் பேரில் ஓ.பன்னீர்செல்வத்தை பார்க்க வந்தேன் என்று சாதாரணமாக ஓட்டலில் டிபன் ஆர்டர் செய்வது போல் கூறினார்.

பிறகு திடீரென்று மவுனம் ஆனார். அப்புறம் மவுனம் கலைந்து திடீரென ‘ஜெயலலிதா ஆன்மா எனக்குள் வந்துவிட்டது. இப்போது கேள்விகளை கேளுங்கள்?’, என்று கண்ணை மூடியபடியே கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

தனக்குள் ஜெயலலிதா ஆன்மா புகுந்து இருப்பதாக சாமியார் கூறியதையடுத்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது அவர் அளித்த பதில்களும் வருமாறு:

எதற்காக ஓபிஎஸ்சை சந்திக்க வந்தீர்கள்?

தற்போது உள்ள சூழ்நிலையில் தீபாவும், ஓபிஎஸ்சும் இணைந்து பணியாற்ற வேண்டும். பெரிய சதி நடக்கிறது , அந்த சதியை முறியடித்து தீபாவை, ஓ.பன்னீர்செல்வத்திடம் சேர்க்க வேண்டும். 

எனது நம்பிக்கைக்கு உரியவரும், அன்புக்கு பாத்திரமுமான ஓ.பன்னீர்செல்வம் மூலம் தான் மக்களுக்கு நான் நல்லது செய்ய இருக்கிறேன். அ.தி.மு.க.வை காப்பாற்ற ஓ.பன்னீர்செல்வமும், தீபாவும் இணைந்து பணியாற்ற வேண்டும். இரட்டை இலை சின்னத்தை இவர்கள் தான் மீட்டெடுக்க வேண்டும். இதுவே எனது ஆசை. 

ஐந்து நாட்களுக்குள் தீபா ஓபிஎஸ்சுடன் இணைய வேண்டும். இல்லாவிட்டால் அவரது எதிர்காலம் கேள்விக்குறிதான்.

 நீங்கள் எப்படி இறந்தீர்கள்?

நான் எனது வீட்டில் மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டு மயங்கினேன். சிறிது நேரத்திலேயே என் உயிர் பிரிந்தது. உயிர் இல்லாத என் உடல் தான் வீட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது. ஆஸ்பத்திரியில் உயிரற்ற என் உடலுக்கு தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. தொண்டர்கள்-பொதுமக்கள் பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும் என் ஆன்மாவை தட்டி எழுப்பியது.

உங்கள் சமாதியில் சசிகலா சபதம் ஏற்று ஓங்கி அடித்து என்ன சொன்னார்? 

பதில் : தன்னை ஆட்சிக்கு வர விடாமல் சதி செய்தவர்களை அழிப்பேன் என்று சபதம் செய்தார். 

தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சர் யார்? நீங்கள் யாருக்கு ஆதரவு?

 அ.தி.மு.க. கட்சியை மட்டும் அல்ல தமிழகத்தை ஓ.பன்னீர்செல்வமும், தீபாவும் தான் இணைந்து காக்கவேண்டும். அதுவே எனது விருப்பம். அப்படி ஒன்று நடக்கும் பட்சத்தில் எனது ஆன்மா சாந்தி அடையும். 

உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை நீங்கள் சென்ன செய்ய போகிறீர்கள்? என்ன தண்டனை வழங்க போகிறீர்கள்?

அதை நான் சொல்லமாட்டேன். ஐகோர்ட்டு அதை தீர்மானிக்கும். சட்டப்படி தண்டனை கிடைக்கும். 

என் ஆன்மா இன்னும் அமைதியடைய வில்லை நான் இங்கேயே தான் சுற்றிகொண்டிருக்கிறேன். இதெல்லாம் நடந்தால் என் ஆன்மா சாந்தி அடையும் இவ்வாறு ஜெயலலிதா ஆன்மா பேசுவதாக சபாரி சித்தர் கூறி செய்தியாளர்களை மிரள வைத்தார். 

சரி ஸ்டாலின் பற்றி உங்கள் கருத்து என்ன என்று ஒரு செய்தியாளர் ஜெயலலிதா ஆன்மாவிடம் கேட்டார். , ஸ்டாலின் ரொம்ப நல்ல மனிதர் அவர் போன்ற மனிதர்கள் தலைவராக இருக்க வேண்டும் என்று கூறினார் சபாரி சித்தர். மன்னிக்கவும் ஜெயலலிதா ஆன்மா.

வருஷா வருஷம் யாருகிட்டயாவது சிக்கிக்கிறோமே என்று இதை பார்த்த செய்தியாளர்கள் வடிவேல் மாதிரி புலம்பியபடி சென்றனர்.