ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ‘தென் தமிழக லாபி’ மீது தனி பாசம் இருந்தது உண்டு. அங்கிருக்கும் முக்கிய சமுதாய வாக்கு வங்கி ஒன்றினாலேயே தனது தேர்தல் அரசியல் வெற்றிகரமாக நகர்வதாக நம்புவார். ஆனால் அது கடந்த சமீப காலங்களில் தகர்ந்தது. ஜெ.,வுக்கு பெருவாரியாக கைகொடுத்து காப்பாற்ற துவங்கிய கை கொங்கு மண்டலத்தில் இருந்து நீண்டது. 

2011-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா அமோகமாக ஆட்சி அமைக்கவும், 2016 -ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை ஒரு வழியாக தக்க வைத்துக் கொள்ளவும் கைகொடுத்தது ‘கொங்கு மண்டலம்’தான். அதனால் கொங்கு மீது தனி பாசத்தை காட்ட துவங்கினார் ஜெயலலிதா. 

அவரது மறைவுக்குப் பின் பெரிதாக விஸ்வரூபமெடுக்கும் என தெற்கு லாபி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முழு ஆட்சி அதிகாரமும் இன்று கொங்கின் கையினுள் சென்று புதைந்திருக்கிறது. முதல்வரில் துவங்கி மிக முக்கிய துறைகளை கையில் வைத்திருக்கும் அமைச்சர்களாக கொங்கு நபர்களே இருக்கின்றனர். 

துணை முதல்வர் தென் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கூட தெற்கு லாபியால் தமிழகத்தில் எந்த அதிகாரத்தையும் செலுத்திட முடிவதில்லை. இது போக பன்னீர்செல்வம் ‘தர்மயுத்தம்’ நடத்திவிட்டு யு டர்ன் அடித்து வந்துள்ளதால் கட்சியிலும் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரமோ, அவர் பற்றிய பயமோ இல்லை. 

இது போதாதென்று செல்லூர் ராஜூ, உதயகுமார் போன்ற தென் தமிழக அமைச்சர்களும் பன்னீர்செல்வத்திடம் பக்குவ நட்பு காடுபவர்களாக இருக்கவில்லை. பன்னீர் வெளியே இருந்த காலத்தில் அவரை சரமாரியாக விமர்சித்துக் கொட்டிய உதயகுமார், இணைப்புக்குப் பிறகும் கூட அவ்வப்போது சீண்டிக் கொண்டுதான் இருந்தார். 

இந்நிலையில் நெருங்கி வரும் நாடாளுமன்ற தேர்தல், தினகரனின் புதிய கட்சி உதயம் ஆகியன அ.தி.மு.க.வினுள் புதிய சலசலப்புகளை உருவாக்கியுள்ளன. இதன் திசை எப்படி வேண்டுமானாலும் பயணிக்கலாம் எனும் நிலை உருவாகியுள்ளது. பிளவுகள், தனி அணிகள் உருவாக்கம் எனும் சூழல்கள் கூட ஏற்படலாம் என்கிறார்கள். 

இப்படியான சூழலில்தான்  ஜெயலலிதா இருந்த காலத்தில் அமைந்திருந்தது போல் ஒரு வலுவான தென் தமிழக லாபியை அ.தி.மு.க.வில் உருவாக்கிட நினைக்கிறார் பன்னீர்செல்வம். அதன் ஒரு முகமாகதான் கடந்த ஞாயிறு அன்று தேனியில் பன்னீர் மகன் ரவி நடத்திய கட்சி விழாவில் தென் தமிழகத்து முக்கிய அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், செல்லூர் ராஜூ போன்றோர் அழைத்து பிரதானப்படுத்தப்பட்டு இருந்தது. 

திடீரென தெற்கில் இப்படி இணையும் அமைச்சர் கூட்டணியை கொங்கிலிருந்தபடி தமிழகத்தை ஆளும் லாபி சுத்தமாக விரும்பவில்லை. சொல்லப்போனால் சூடேறிவிட்டார்கள். ‘இது தொடர்ந்தால் நமக்கு சவாலாக அமையலாம்.’ என்று தங்களுக்குள் ரகசிய விவாதமே நடத்தவும் செய்திருக்கிறார்கள்.

இவர்கள் கடுப்பானதன் விளைவோ என்னவோ, தேனியில் பன்னீர் மகனின் விழா நடந்த நேரத்தில் அம்மாவட்டம் குரங்கணி காட்டில் பெரும் தீ பற்றி எரிந்து பல விஷயங்கள் சாம்பலாகின. 

தெற்கில் புது அதிகார லாபி உருவாக்கிட நினைத்த பன்னீருக்கு இந்த தீ சென்டிமெண்ட் மூலம் மன உளைச்சலே உருவாகியுள்ளது! என்கிறார்கள்.