ஓபிஎஸ் தற்போது குடியிருக்கும் அரசு வீட்டை காலி செய்ய பொதுப்பணித்துறை தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதால் வாடகை வீடு தேடும் பணியில் ஓபிஎஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார்.அதே நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்தனர்.

இதனையடுத்து சசிகலாவுக்கு முதலமைச்சராகும் ஆசை வந்தது.இதனால் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர் முதலமைச்சராக பொறுப்பேற்கவிருந்த நிலையில் ஓபிஎஸ் திடீரென போர்க் கொடி உயர்த்தினார்.

இதையடுத்து ஓபிஎஸ் சசிகலா இடையே அதிகாரத்தை யார் கைப்பற்றுவது? என்ற போட்டி எழுந்தது.ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டதையடுத்து அவர் முதலமைச்சராகும் வாய்ப்பு பறிபோனது.

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால் ஓபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற அடுத்த ஒரு மணிநேரத்தில் ஓபிஎஸ் குடியிருக்கும் அரசு வீட்டை காலி செய்யும்படி பொதுப் பணித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.

மேலும் நாள்தோறும் அரசு அதிகாரிகள் வீட்டை காலி செய்ய சொல்லி ஓபிஎஸ்க்கு நெருக்கடி கொடுத்து வருவதால், அவர் வாடகைக்கு வீடு தேடி வருகிறார்.

தொண்டர்கள் வந்து செல்வதற்கு வசதியாக தற்போது ஓபிஎஸ் குடியிருக்கும் வீட்டு அருகிலேயே வாடகை வீடு பார்ப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த பசுக்களை அவர் தானம் செய்து விட்டதாகவும், வீட்டை காலி செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஓபிஎஸ் மற்றும் அவரது அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோருக்கு எம்எல்ஏக்கள் விடுதியில் இன்னும் அறை ஒதுக்கப்படவில்லை என தெரிகிறது.