சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கும் செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்க நிகழ்ச்சி அழைப்பிதழில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இதனைடுத்து, நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எந்த முடிவு எடுக்கப்படாததால் அக்டோபர் 7ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துவிட்டு தனது ஆதரவாளர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், இரு பிரிவாக பிரிந்து அதிமுக நிர்வாகிகள் முதல்வரையும் துணை முதல்வரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க நிகழ்வு நடைபெறுகிறது. இதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் இன்று நடைபெற உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைப்பதற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை. ஆனால், தனியார் நிறுவனம் வெளியிட்ட அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என அச்சிடப்பட்டிருந்தது. தற்போது அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.