தேமுதிக தலைவர் விஜயகாந்தை, சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் திடீரென சந்தித்து வருகின்றனர். 

தேமுதிக உயர்நிலைக்கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் விஜயகாந்தை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வருகிறார். அதிமுகவுடன் கூட்டணி குறித்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இருப்பினும் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் நாளை தேமுதிக கூட்டணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தங்களது நிலையை அறிவிக்க இருப்பதாக விஜயகாந்த் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு அமைச்சர் ஜெயகுமாரும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பிஎஸ், ‘’ விஜயகாந்தை உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காகவும், மரியாதை நிமித்தமாகவும் சந்தித்தோம். அவர் பூரண குணமடைந்து மிகவும் ஆரோக்கியத்தோடு இருக்கிறார். எங்களிடம் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் பேசினார். அதிமுகவில் தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

இன்றோ அல்லது நாளையோ நல்ல முடிவு எட்டப்படும். வரும் 6ம் தேதிக்குள் கூட்டணியை இறுதி செய்து விடுவோம். மோடி வருகைக்குள் கூட்டணியை முடித்து பிரச்சாரத்தை ஆரம்பித்து விடுவோம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.