2020ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி ஆளுநர் பன்வரிலால் ப்ரோஹித் உரையுடன் தொடங்கியது. பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துடன் 9ம் தேதி கூட்டம் நிறைவு பெற்றது. இந்தநிலையில் 2020-2021ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.


நிதியமைச்சர் பொறுப்பை வகித்து வரும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். கடந்த 2011ம் ஆண்டு மறைந்த செல்வி ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நிதியமைச்சர் பொறுப்பை பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கினார். அப்போது முதன்முதலாக தமிழக அரசின் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். அதன்பிறகு அந்த ஆட்சியில் 2012, 2013, 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். மீண்டும் 2016 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற போது நிதியமைச்சர் பொறுப்பு பன்னீர் செல்வத்திடமே ஒப்படைக்கப்பட்டது.

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அந்த பட்ஜெட்டையும் அவரே தாக்கல் செய்தார். பின் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியிலும், தமிழக அரசிலும் ஏற்பட்ட மாற்றங்களாலும், கருத்து வேறுபாடுகளாலும் 2017 ல் பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை. அப்போது நிதியமைச்சர் பொறுப்பை வகித்து வந்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அந்த ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பிறகு துணைமுதல்வராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வத்திடம் மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பு ஒப்படைக்கப்படவே 2018 , 2019 ஆகிய ஆண்டுகளில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த வருடமும் பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் அவர் 10 வது முறையாக தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி அரசின் கடைசி முழுநேர பட்ஜெட்..! பலத்த எதிர்பார்ப்புடன் இன்று தாக்கல்..!