ops has to inquire first regarding jayalalitha death said stalin
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா ஆலோசனை நடத்தினார்.
சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் புகார் மனுவை அளித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஆளுங்கட்சியின் சார்பிலும் தினகரன் சார்பிலும் இந்த பகுதியில் என்னென்ன அநியாயங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி விக்ரம் பத்ராவிடம் தெரிவித்தோம். 20க்கும் மேற்பட்ட புகார்கள் வழங்கியிருக்கிறோம். பணம் விநியோகித்த அதிமுகவினரை பிடித்து திமுக கொடுத்திருக்கிறது. நேற்றைய தினம் மட்டுமே 100 கோடி ரூபாய் அளவிற்கு அதிமுக, தினகரன் சார்பில் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த புகாரையும் கொடுத்திருக்கிறோம்.
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் தேர்தலில் நிற்க முடியாத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணப்பட்டுவாடாவைத் தடுத்து அதை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
பணப்பட்டுவாடா படு ஜோராக நடைபெற்று கொண்டிருக்கிறது. பழனிசாமி, விஜயபாஸ்கர், உள்ளிட்ட அமைச்சர்களின் மேற்பார்வையில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருகிறது. போலீசும் தேர்தல் அதிகாரிகளும் பணப்பட்டுவாடாவிற்கு உடந்தையாக இருப்பது தொடர்பாகவும் புகார் அளித்திருக்கிறோம். பணப்பட்டுவாடா தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் ஒப்படைத்திருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
2 கோடி ரூபாய் வைத்திருந்த அதிமுகவை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தால், அது குறைவுதான் என போலீசார் தெரிவிக்கின்றனர். போலீசாரும் தேர்தல் அதிகாரிகளும் அலட்சியாக செயல்படுகின்றனர். காவல்துறையினர் கண்டும் காணாமல் இருக்கின்றனர். குதிரை பேர அரசின் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இணைந்து தினகரனும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கின்றனர். கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் அதிமுக டெபாசிட் கூட வாங்க முடியாது என ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து, ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்த கருத்து குறித்து ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டியவர் அப்போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வம்தான். அவர்தான் முதல் குற்றவாளி என கடுமையாக சாடினார்.
