துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு அவரது குடும்பத்தால்தான் ‘கண்டம்’! என்பார்கள் அவரது ஆதரவாளர்களே. பன்னீரின் தம்பி ராஜா, மகன் ரவி இருவரும் அடிக்கட்சி சர்ச்சைக்குள் சிக்குவதால் கடைசியில் உருட்டப்படுவது என்னவோ ஓ.பி.எஸ்.ஸின் தலைதான் என்பதுதான் சிக்கலே. 

பன்னீரின் அதிகாரத்திலடங்குகிறது வீட்டுவசதி வாரியத்துறை. இதில் அங்கீகரிக்கப்படாத மனைகளை ‘ஒழுங்குபடுத்துதல்’ எனும் நடைமுறையை மேற்கொள்வதற்காக ஒரு சதுர அடிக்கு 3 ரூபாயை கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஒரு டீமோ தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் தங்களது பிரதிநிதிகளை அமர வைத்திருக்கிறது. முக்கிய நகரங்களில் ஹோட்டலில் ரூம் போட்டு தங்கியிருக்கும் அந்த நபர்களிடம் சென்று, எப்படி அரசாங்கத்துக்கு சதுர அடிக்கு மூன்று ரூபாய் கட்டுகிறார்களோ அதே அளவுக்கு இவர்களுக்கும் கப்பம் கட்டினால்தான் காரியம் ஆகிறதாம். இல்லையெனில் அங்கீகரிக்கப்படாத நிலம் அப்படியேதான் கிடக்க வேண்டி இருக்கிறதாம். 

இப்படி வசூல் டீம தயார் செய்து வைத்திருப்பது வேறு யாருமல்ல, பன்னீரின் மகன் ரவீந்திரநாத்!தான். என்று சமீபத்தில் பெரும் பரபரப்பு கிளம்பியது. அப்பாவின் முழு ஆசீர்வாதத்துடன் இதை ரவி செய்து கொண்டிருக்கிறார் என்று கடும் விமர்சனம் எழுந்தது. இதிலெல்லாம் கோபப்பட்டுதான் ‘நான் அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை. ஆனால் ஆளும் அணியுடன் என்னை இணையச் சொன்ன பிரதமர் மோடிதான், அவசியம் அமைச்சர் பதவியையும் பெறுங்கள்! என்றார். அதனால்தான் அமைச்சரானேன்.’ என்று பேசி பெரும் பரபரப்பை கிளப்பினார். இதில் பன்னீர் மீதான அந்த புகார் அனல் ஒரு வழியாய் அடங்கியது. 

மகனால் ஏற்பட்ட பஞ்சாயத்தை மறைக்க பிரதமர் வரை இழுத்துவிட்டு சரி செய்தார் பன்னீர். இந்நிலையில், தற்போது தம்பியால் ஒரு சிக்கல் உருவாகி இருக்கிறது. அதாவது ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தேனி மாவட்டத்தில் இருக்கிறார். அண்ணன் பெரும் அதிகார மையமாக இருக்கும் ஜோரில் ஓவராக ஆட்டம் போடுகிறார் என்று இவர் மீது அடிக்கடி விமர்சனங்கள் எழுவது வாடிக்கை. தேனி மாவட்டத்தில் ஒரு பூசாரியின் தற்கொலை விவகாரத்தில் கூட வருடக்கணக்கில் ராஜாவின் தலை உருட்டப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் தொழில் துவங்க வேண்டுமென்றால் ராஜாவை கேட்காமலோ அவருக்கு பணம் கட்டாமலோ தொழில் துவங்க முடியாது என்று அட்ராசிட்டி செய்கிறார்கள்! என இப்போது ஒரு புது விவகாரம் வெடித்திருக்கிறது. திருச்சி தில்லை நகரை சேர்ந்த  கிருஷ்ணமூர்த்தி என்பவர் தேனி மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் துவக்கினாராம். அதைத்தொடர்ந்தே அவரிடம் பணம் பறிப்பு வேலையை துவக்கியதாம் அ.தி.மு.க. டீம் ஒன்று. தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியின் முன்னாள் துணைத்தலைவரான முகுந்தன் என்பவர் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்திக்கு போன் செய்து ‘எங்களை மீறி தொழில் பண்ண முடியாது. பணத்தை கட்டிட்டு பகுமானமா ஆபீஸை நடத்திக்க.’ என்று மிரட்டினாராம். பிறகு நேரிலேயே ஒரு கும்பலோடு வந்து, கட்சி வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டினாராம். கடைசியில் பத்து லட்சத்தில் வந்து நின்றவர்கள், கையோடு ஒன்றரை லட்சத்தை பிடுங்கி சென்றாராம். மிரட்டியபோது ‘ஓ.ராஜா அண்ணன் சம்மதிச்சாதாம் தேனி மண்ணுல பிஸ்னஸ் பண்ண முடியும். கட்ட வேண்டியத ஒழுங்கா கட்டிட்டா உனக்கு பிரச்னையில்லை.’ என்று கூறி சென்றார்களாம். 

கிருஷ்ணமூர்த்தி போலீஸில் புகார் செய்ய, முகுந்தன் உள்ளிட்டோரை வளைத்திருக்கிறது போலீஸ். அப்போது ‘எங்க மேலே கை வைக்கிறதுக்கு முன்னாடி அண்ணன் ஓ.ராஜாகிட்ட கேட்டுக்குங்க.’ என்றாராம் முகுந்தன். ராஜாவின் சிக்னல் படி அதில் இரண்டு பேரை விட்டுவிட்டு மற்றவர்களை கைது செய்ததாம் போலீஸ். இந்த விவகாரம் தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் வரைக்கும்  பேசி சம்மதம் வாங்கிய பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடிந்ததாம் போலீஸால். 

‘எனக்கும் இந்த பிரச்னைக்கும் எந்த சம்பதமுமில்லை. நான் சட்டவிரோத செயல்களை ஆதரிக்கிறதில்லை.’ என்று இப்போது சொல்லி வரும் ஓ.ராஜா, அந்த இரண்டு பேரை மட்டும் விட்டுவிட சொல்லி போலீஸுக்கு உத்தரவு போட்டது ஏன்? என்பதுதான் கேள்வியே. 

கிருஷ்ணமூர்த்தி விவகாரத்தை வைத்து ‘தமிழ்நாட்டில் நிலத்துக்கு அப்ரூவல் வாங்கவும், பிஸ்னஸ் செய்யவும் தலையை அடமானம் வைத்து துணை முதல்வர் கோஷ்டிக்கு கப்பம் கட்ட வேண்டியுள்ளது. பன்னீரின் மகனும், தம்பியும் சேர்ந்து தமிழ்நாட்டை விழுங்க துடிக்கிறார்கள்.’ என்று சொல்லி பெரும் கண்டன போராட்டங்களை கையிலெடுக்க ஆயத்தமாகி வருகின்றன எதிர்கட்சிகள்.

இந்த செய்தியின் ஆரம்ப வரிகளை இப்போது மறுபடியும் வாசியுங்கள்! பன்னீரின் ஆதரவாளர்கள் புலம்புவதன் காரணம் புரியும்.