டெல்லியில் இருந்து திடீரென வந்த அழைப்பால் ஓ.பி.எஸ் உற்சாகத்துடன் புறப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.  

அண்மைக்காலமாக பா.ஜ.க மேலிடம் – எடப்பாடி பழனிசாமி இடையிலான உறவு அவ்வளவு சுமூகமாக இல்லை என்பது தான் கோட்டை வட்டார தகவல்களாக இருக்கின்றனர். மத்திய அரசின் பல்வேறு கொள்கை முடிவுகளை வெளிப்படையாகவே எடப்பாடி எதிர்த்ததை பா.ஜ.கவால் ஜீரனித்துக் கொள்ள முடியவில்லை. என்ன தான் சசிகலாவால் முதலமைச்சராகியிருந்தாலும் தற்போதைய சூழலில் மெஜாரிட்டி இல்லாத நிலையிலும் எடப்பாடி பதவியில் இருக்க காரணம் நாம் தான் என்று நினைக்கிறது பா.ஜ.க

இதனால் தான் மத்திய அரசின் சில முடிவுகளுக்கு எதிராக எடப்பாடி செயல்படுவதை பா.ஜ.கவால் ஏற்க முடியவில்லை. அதிலும் அணைகள் பாதுகாப்பு மசோதா எதிர்ப்பு, தேசிய கல்வி வாரியம் அமைக்க எதிர்ப்பு, பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்க எதிர்ப்பு என எடப்பாடியின் சில நிலைப்பாடுகளால் பா.ஜ.க அவர் மீது அதிருப்திலேயே இருந்துள்ளது. இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனின் மாமனார் சுப்ரமணியம் பங்குதாரராக இருக்க கூடிய நிறுவனங்களை குறி வைத்து மத்திய அரசு வருமான வரித்துறை சோதனையை முடுக்கிவிட்டுள்ளது.

  தற்போது வருமான வரித்துறை சோதனைக்கு ஆளான எஸ்.கே.பி குழுமத்தின் நாகராஜன் செய்யாத்துறை, கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவனர் குமாரசாமி ஆகியோரை வருமான வரித்துறை விசாரணைக்கு அழைத்து துருவ ஆரம்பித்துள்ளது. இவர்கள் எடப்பாடி குறித்தோ அல்லது அவரது சம்பந்தி குறித்தோ வாய் திறந்தால் சிக்கல் பெரிதாகும் என்று எடப்பாடி தரப்பு அப்செட்டில் உள்ளது. இந்த நிலையில் தான் உடனடியாக டெல்லி புறப்பட்டு வருமாறு ஓ.பி.எஸ்சுக்கு திடீர் அழைப்பு வந்துள்ளது.

   ஓ.பி.எஸ்சும் தனது சகாக்களான கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியனுடன் டெல்லிக்கு உற்சாகமாக ஓடியுள்ளார். இந்த தகவல் அறிந்து எடப்பாடி மேலும் பதற்றம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் கடந்த சில மாதங்களில் டெல்லியில் இருந்து ஓ.பி.எஸ்சுக்கு அழைப்பு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். திடீரென டெல்லி மேலிடம் ஓ.பி.எஸ்சை அழைத்திருப்பது தனக்கு எதிராக நடவடிக்கையை தீவிரப்படுத்தும் செயலாக இருக்குமோ என்று எடப்பாடி கலக்கத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

எது எப்படியோ ஈ.பி.எஸ் இருக்கும் போது ஓ.பி.எஸ்சை டெல்லி மேலிடம் அழைத்தே ஈ.பி.எஸ் டீமுக்கு பெரிய பின்னடைவு என்று தான் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.