சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அதிமுக எப்போதும் செயல்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அனைத்திந்திய அதிமுக எப்போதும் செயல்படும். அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., கழக நிரந்தரப் பொதுச்செயலாளர் அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் கட்டிக் காத்த கழகமும், அவர்கள் வழியில் நடைபெறும் கழக அரசும், சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் சமத்துவ, சகோதரத்துவ கொள்கைகளை நிலைநாட்ட எப்பொழுதும் உறுதியாய் பாடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சமூக விரோத சக்திகளும், பதவிக்கு வருவதற்காகப் பாதகச் செயல்களை மனசாட்சியின்றி துணிந்து செய்யும் சில எதிர்க்கட்சிகளும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதை அனைவரும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் அதிமுக அரசுக்கு மக்களின் பேராதரவு பெருகி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டிவிட்டு, இஸ்லாமிய சமூக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


“ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே, உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே” என்ற சகோதரத்துவ உணர்வில் ஆழமான நம்பிக்கை கொண்ட இயக்கம் அதிமுக. இது உண்மையான மதச்சார்பற்ற இயக்கம். மதத்தின் பெயரால் மனிதர்களை பிளவுபடுத்தும் எண்ணம் துளியும் இன்றி, எல்லோரையும் சொந்த பந்தங்களாகவும் சகோதரர்களாகவும் நேசித்துப் பழகுவதுதான் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை. அதுவே, எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோர் காட்டிய பாதை. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அதிமுக அரசு, இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாவலனாகவும், அவர்களின் நலன் பேணும் நண்பனாகவும் செயல்பட்டு வருகிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமிய மக்களுக்கு தொண்டு செய்து வருவதும் கழக அரசுதான்.


அதிமுக இஸ்லாமிய சமூகத்திற்கு என்றைக்கும் நண்பனாகவும், உற்ற தோழனாகவும் விளங்கும் என்று  தெரிவித்துக் கொள்கிறோம். சிறுபான்மை சமூக மக்கள் விழிப்பாகவும், விஷமப் பிரச்சாரங்களை செய்து சுயலாபம் அடைய சதித் திட்டம் தீட்டி செயல்படுவோரிடம் கவனமாகவும் இருந்து அமைதி காத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.” என்று அறிக்கையில் ஓபிஎஸ் - இபிஎஸ் தெரிவித்துள்ளார்.