ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை இன்று காலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தனர். 

இந்த அறிவிப்பு ஒரு சில தரப்பினரை மட்டுமே உற்சாகப்படுத்தி இருந்தாலும் பலர் தங்கள் சமுதாயத்தை ஒதுக்கி வைக்கும்படியான முடிவை ஓ.பிஎஸும், எடப்பாடியாரும் எடுத்துள்ளதாக புகார் வாசித்து வருகிறார்கள். வழிகாட்டு குழுவில் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை என கட்சிக்காரர்களும், பதவியை அனுபவித்தர்வர்களும் புலம்புவது வாடிக்கையானதே. ஆனால், இதுவரை அதிமுகவின் வெற்றிக்கு துணை நின்ற, வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் பலமுள்ள சமுதாயத்தினரை ஒதுக்கி வைத்து விட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. 

அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும், ஆர் காமராஜும் கள்ளர் வகுப்பை சார்ந்தவர்கள். அமைச்சர்களான தங்கமணியும் , எஸ்.பி.வேலுமணியும் கவுண்டர் வகுப்பை சேர்ந்தவர். அமைச்சர் வி.வி.சண்முகம் வன்னியர் வகுப்பை சேர்ந்தவர், அமைச்சர் ஜெயக்குமார் மீனவர். ஆக எடப்பாடி பழனிசாமிபெரும்பான்மையான கவுண்டர்,  முக்குலத்தோர், வன்னியர் ஆகிய மூன்று பெரும்பான்மை சாதியினருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வழி காட்டுதல் குழுவில் சேர்த்து இருப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர். 

அதேபோல் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த ஜே.சி.டி. பிரபாகர் கிறிஸ்தவ வன்னியர், மனோஜ் பாண்டியன், நாடார், சைவ பிள்ளை இனத்தை சேர்ந்த பா.மோகன், யாதவர் வகுப்பை சேர்ந்த கோபால கிருஷ்ணன், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சோழவந்தன் எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோரை வழி காட்டுதல் குழுவில் இணைத்துள்ளார்.

கணிசமாக உள்ள இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. குழுவில் கடைசி வரை இடம்பெற்றிருந்த முன்னாள் எம்.பி அன்வர் ராஜா பெயர் ஏனோ கடைசியில் மிஸ்ஸிங். அதே போல் பெண்கள் வாக்குகளை மொத்தமாய் அள்ளும் கட்சி அதிமுக. ஆனால் பெண்கள் ஒருவருக்கும் வாய்ப்பு தரப்படவில்லை. இதுவும் ஏமாற்றமாகவே கருதப்படுகிறது. அனைத்து சாதியினரையும் அரவணைத்து செல்லும் கட்சி அதிமுக என எதிர்பார்த்தால், அந்தக் கட்சிக்கு எம்ஜிஆர் காலம் தொட்டு அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு பாத்தியப்பட்ட தங்கள் சமுதாயத்தை புறக்கணித்து விட்டது தற்போதைய அதிமுக தலைமை என புகார் வாசித்துள்ளார் மருது சேனை தலைவர் ஆதிநாராயணன். 

இதுகுறித்து அவர், முக்குலத்தோரில் கள்ளர், மறவர், அகமுடையார் என மூன்று பிரிவுகள் இருந்தாலும் அகமுடையார் தரப்பு மட்டும் எப்போதும் ஒதுக்கி வைக்கப்பட்டு வருகிறது. 11 பேர் கொண்ட குழுவில் கள்ளர் பிரிவை சேர்ந்த இருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மறவர் பிரிவில் ஓ.பி.எஸ் பதவி வகித்து வருகிறார். ஆனால் பெரும்பான்மை பிரிவான எங்கள் தரப்பிலிருந்து யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தென்மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவது அகமுடையார் வசித்து வருகிறார்கள். வடமாவட்டங்களில் அகமுடைய முதலியார்  என்கிற பிரிவில் வசித்து வருகிறார்கள். கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கணிசமாக வசித்து வருகிறோம். இப்படி பெரும்பான்மை மக்களை கொண்டுள்ள எங்கள் தரப்பில் ஒருவரை அதிமுக வழிகாட்டு குழுவில் இணைத்திருக்கலாம்’’என வேதனையை கொட்டிதீர்த்துள்ளார்.