ஒற்றை தலைமை வேண்டும் என திடீர் கொடிபிடித்த ராஜன் செல்லப்பா, அதிமுகவின் தலைவன் நாமாக இருக்க வேண்டும். அல்லது நாம் கொண்டு வந்தவராக இருக்க வேண்டும்’ என கூறி மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். 

தமிழகத்தில் நிலவும் பரப்பரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுகவில் அடுத்த பரபரப்பு சம்பவமாக அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தனது ஆதரவாளர்களுடன் மதுரை திருப்பரங்குன்றத்தில் அவசர ஆலோசனை நடத்தி வருவது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவிற்கு வலுவான ஒற்றைத்தலைமை தேவை என மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அத்துடன் ஒற்றை தலைமையில் அதிமுகவை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல வேண்டும். இரண்டு தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்கு தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அவரது கருத்து தமிழக அரசியலில் புயலை கிளம்பியதுடன் அதிமுகவில் அடுத்த பரபரப்பையும் ஏற்படுத்தியது.

ராஜன் செல்லப்பாவின் கருத்து ஆதரவாக குன்னம் அதிமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரனும் கருத்து கூறியதால் அதிமுகவில் சர்ச்சை நிலவியது. இத்தகைய பரபரப்பான சூழலில் சென்னையில் ஜூன் 12-இல் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதனிடையே, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றும், ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து கட்சி நிர்வாகிகள் யாரும் கருத்து சொல்லக்கூடாது என அதிமுக தலைமை கட்டுப்பாடு விதித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில், அதிமுகவில் அடுத்த பரபரப்பு செயலாக ராஜன் செல்லப்பா தனது ஆதரவாளர்களுடன் இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் திடீரென முக்கியமான அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். ராஜன் செல்லப்பாவின் ஒற்றை தலைமை குறித்து கருத்துக்கு பின்னர், கட்சி நிர்வாகிகள் யாரும் கருத்து சொல்லக்கூடாது என அதிமுக தலைமை கட்டுப்பாடு விதித்திருந்தது. ஆனால், இதனையும் மீறி ராஜன் செல்லப்பா ஆலோசனை கூட்டத்தில் அவரது நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.

 

அப்போது பேசிய அவர், ’’அதிமுகவில் கட்டுப்பாடு அவசியம். அதிமுகவை வீழ்த்த பலர் நினைக்கின்றனர். ஆனால், அது நிறைவேறாது. கட்டுப்பாடு என்பது அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன் மற்றும் முனுசாமி ஆகியோருக்கும் பொருந்தும். தலைவன் நாமாக இருக்க வேண்டும் அல்லது நாம் கொண்டு வந்த தலைவராக இருக்க வேண்டும். அம்மாவின் திட்டங்கள் வீடு வீடாக சென்று சேர்ந்துள்ளது. அப்படி இருந்தும் அதிமுகவின் கோட்டையாக இருந்த பல இடங்களை நாம் கோட்டை விட்டு விட்டோம்’’ என தெரிவித்தார்.