Asianet News TamilAsianet News Tamil

அம்மா உணவக பணியாளர்களை நீக்க முயற்சி… கடும் கண்டனம் தெரிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்!!

அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஏழை, எளியத் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றிட வழிவகை செய்திட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

OPS condemned the attempt to dismiss amma unavagam staffs
Author
Tamilnadu, First Published Nov 29, 2021, 3:10 PM IST

அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஏழை, எளியத் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றிட வழிவகை செய்திட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்துகொண்டால் மட்டும் போதாது. தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கையுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால் இதற்கு முரணான நிலை தான் தமிழ்நாட்டில் அனைத்துப் பிரச்சனைகளிலும் நிலவுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தேர்ந்தெடுத்த மக்களுக்கு நம்பிக்கையுள்ள ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. ஒரு பக்கம் அம்மா உணவகங்களை இருட்டடிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தி.மு.க.வினர், மறுபக்கம் அம்மா உணவகங்களில் பணிபுரிவோரை வேலையிலிருந்து நீக்கும் முயற்சியையும் செய்து வருகின்றனர். மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட அம்மா உணவகங்களில் பணியாற்றுவோரை பணிநீக்கம் செய்வதாக மாநகராட்சியினர் தெரிவித்தபோது அதனைக் கண்டித்து அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்கள் சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அவ்வாறு அறநெறியில் போராடியவர்களை காவல் துறையில் புகார் அளித்து கைது செய்வோம் என மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டியதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்தன. திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட அம்மா உணவகங்களிலும் இதே நிலைமை தான் நீடிப்பதாக செய்திகள் வருகின்றன. சில இடங்களில் நிதிச் சுமையை காட்டி பணியாளர்களை விலகச் சொல்கிறார்கள் என்ற தகவலும் வருகிறது. மொத்தத்தில், தமிழ்நாடு முழுவதும் தற்போது அம்மா உணவகங்களில் பணியாற்றுபவர்களை பணியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

OPS condemned the attempt to dismiss amma unavagam staffs

தற்போது அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. இந்தச் சூழ்நிலையில் கம்பம் நகர தி.மு.க. செயலாளர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண்களிடம் பேசிய ஓர் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், தி.மு.க. நகரச் செயலாளர் அம்மா உணவகங்களில் பணிபுரியும் பெண்களிடம் , தாங்கள் தான் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்து விட்டீர்களே, புதிதாக மற்றவர்களுக்கு வழிவிடுங்கள் என்றும், தன்னுடைய சொந்த ஓட்டலில் வேலை ஏற்படுத்தித் தருவதாகவும், கட்சிப் பணி புரிந்தவர்களுக்கு வேலை தர வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளதாகவும், கட்சிக்காக வேலை பார்த்தவர்கள் பத்து ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்ததால் தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறுவதாகவும் தெரிவித்து இருக்கிறார். இதற்கு அந்தப் பெண்கள் தாங்கள் ஏழு ஆண்டுகளாக இங்கு தான் பணிபுரிந்து வருகிறோம் என்றும், இதை நம்பித்தான் தங்களுடைய வாழ்வாதாரம் உள்ளது என்றும், தங்களில் பெரும்பாலானோர் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள் என்றும் கூறியுள்ளனர். ஆனால் தி.மு.க.வின் நகரச் செயலாளரோ அவர்களை பணியிலிருந்து எடுப்பதில் உறுதியாக உள்ளதாக அந்த ஆடியோச் செய்தியிலிருந்து தெரிய வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற செயலில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வருகின்றன. தி.மு.க.வினரின் இதுபோன்றச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. அம்மா உணவகங்களில், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் தான் பணியாற்றுகின்றனர். கொரோனா நோய்த் தொற்று உச்சத்தில் இருக்கும்போது, அனைத்து உணவகங்களும் முற்றிலுமாக மூடப்பட்ட நிலையில், தங்களது உயிரை துச்சமென மதித்து, நேரம், காலம் பார்க்காமல் அல்லும் பகலும் அயராது உழைத்து ஏழை, எளிய மக்களின் பசியை ஆற்றும் மகத்தான பணியைச் செய்தவர்கள்.

OPS condemned the attempt to dismiss amma unavagam staffs

அவர்களை அந்தப் பணியிலிருந்து எடுத்துவிட்டு அங்கு தி.மு.க.விற்கு பணியாற்றியவர்களை வேலைக்கு அமர்த்துவது என்பது நியாயமற்ற செயல். இயற்கை நியதிக்கு முரணானது. எங்களுக்கு வாக்களித்தவர்கள், இவர்களுக்கு வாக்களித்தோமே என்று மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலே, வாக்களிக்கத் தவறியவர்கள், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று வருத்தப்படக்கூடிய வகையிலே எனது பணி இருக்கும் என்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசும்போது முதலமைச்சர் குறிப்பிட்டார். அம்மா உணவகங்களில் பணியாற்றுபவர்கள் எல்லாம் யாருக்கு வாக்களித்தார்கள் என்று தெரியாத நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை பணியிலிருந்து நீக்க முயற்சிப்பது, பணியிலிருந்து விலகுமாறு மிரட்டுவது முதலமைச்சரின் கூற்றுக்கு எதிராக அமைந்துள்ளது. அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு இருக்கிறது. எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, களத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தீர விசாரித்து, அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஏழை, எளியத் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றிட வழிவகை செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios